புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட வந்த பொதுப் பணித்துறை ஊழியர்களை தடுத்ததால் போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மேனிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி போராட்டத்தை தொடர்ந்தனர். அதேநேரத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட மற்றொரு தரப்பினரை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.
புதுச்சேரியில் பொதுப் பணித்துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், பொதுப்பணி ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த 750 பேரை பணி நிரந்தரம் செய்து முதல்வர் ரங்கசாமி ஆணை தந்தார். இதில் பெரும்பாலானோர் முதல்வர் ரங்கசாமி வழக்கமாக போட்டியிடும் முக்கியத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில், அனைத்து தொகுதிகளிலும் பணிபுரியும் பொதுப்பணித் துறை ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரி 300-க்கும் மேற்பட்ட பொதுப்பணித் துறை ஒப்பந்த ஊழியர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட வந்தனர். போலீஸார் அவர்களை தடுத்தனர்.
இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஊழியர்களில் ஒரு பகுதியினர் சோனாம் பாளையம் நான்கு முனை சந்திப்பில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஊழியர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். ஆனால், இதனை ஏற்க மறுத்து வாட்டர் டேங்க் மேலே நின்று ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியப்படி இருந்தனர்.
இதில் ஒரு தரப்பினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யத் தொடங்கினர்.
அதையடுத்து தடியடி நடத்தி போராட்டக்காரர்களை தரதரவென்று இழுத்துச் சென்றனர். இதனால் மறியலில் ஈடுபட்டோர் எழுந்து ஓடத் துவங்கினர். நாலாப்பக்கமும் ஓடியதால் அப்பகுதி முழுக்க பதற்றம் நிலவியது. போலீஸ் தரப்பானது மேனிலை நீர்த்தேக்கத்தொட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.