‘புஷ்பா 2’ படப்பிடிப்பில் அல்லு அர்ஜுனுடன் இணையும் பஹத் பாசில் – இங்குதான் ஷுட்டிங்?

‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பஹத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுனின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தில், புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் சற்று வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், செம்மரக் கடத்தலை தடுக்கும் போலீஸ் அதிகாரியாக ஃபஹத் பாசிலும் நடித்திருந்தனர்.

இவர்களுடன், ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி, சுனில், ராவ் ரமேஷ், தனஞ்ஜெயா, அனசுயா பரத்வாஜ், அஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்தப் படத்தில், சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். மாபெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடந்த நிலையில், சிறு இடைவெளிக்குப் பின் அடுத்தக்கட்டமாக பெங்களூருவில் படப்பிடிப்பு நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

image

இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள படப்பிடிப்பில், அல்லு அர்ஜுனுடன், ஃபஹத் பாசில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே, ஃபஹத் பாசில் பெங்களூருவில் தான் முகாமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வருகிற ஏப்ரல் 8-ம் தேதி அல்லு அர்ஜுன் தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த 3 நிமிட கிளிம்ப்ஸ் காட்சிகள் ‘புஷ்பா: தி ரூல்’  படத்திலிருந்து வெளியாகலாம் என்று தகவல் பரவி வருகிறது. இதற்கான டீசர் கட் ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும் கூறப்படும் நிலையில், அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ட்விட்டரில் #PushpaTheRule என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.