கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29). பேச்சிப்பாறை, பிலாங்காலை உள்ளிட்ட சர்ச்சுகளில் பாதிரியாராக இருந்து வந்தார். இவர் குறித்த ஆபாச காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பேச்சிப்பாறையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மாவட்ட ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோமீது சைபர் க்ரைம் போலீஸார் கடந்த 16-ம் தேதி வழக்கு பதிவுசெய்தனர். இந்த நிலையில், நீதிமன்றத்தில் சரணடைய காரில் வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீஸார் இன்று காலை கைதுசெய்தனர். அவரை நாகர்கோவில் எஸ்.பி அலுவலக கட்டடத்திலிலுள்ள சைபர் க்ரைம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது பெரும்பாலான கேள்விகளுக்கு பாதிரியார் அமைதியாக இருந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
போலீஸ் விசாரணையில் ஆரம்பத்தில் பேச மறுத்த பாதிரியார், பின்னர் சில கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். எந்தப் பெண்ணையும் கட்டாயப்படுத்தவோ, மிரட்டி சித்ரவதை செய்யவோ இல்லை என பாதிரியார் தெரிவித்திருக்கிறார். இளம்பெண்களை நிர்வாணமாக வீடியோ பதிவுசெய்தது ஏன் என போலீஸார் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, `எந்தப் பெண்ணையும் மிரட்டவில்லை, எனது தேவைக்காக மட்டுமே வீடியோக்களை பதிவுசெய்து வைத்திருந்தேன். நான் யாருக்கும் வீடியோக்களை அனுப்பவில்லை’ என பாதிரியார் கூறியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பெனடிக்ட் ஆன்றோ பாதிரியார் பயிற்சியை முடித்தப் பின்னர், முதலில் பேச்சிப்பாறை பகுதியிலுள்ள சர்ச்சில் பயிற்சி பாதிரியாராக இருந்திருக்கிறார். அப்போதே இளம்பெண்களிடம் நெருக்கம் காட்ட தொடங்கியிருக்கிறார். பிலாங்காலை சர்ச்சுக்கு பாதிரியாராக நியமிக்கப்பட்ட பிறகு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக சர்ச்சுக்கு வரும் இளம்பெண்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளிலும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ சரளமாகப் பேசுவாராம். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார்.