சென்னை, பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான நகைக்கடையில் ஷட்டரின் வெல்டிங் மெஷினில் துளையிட்டு, கடையின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது கிலோ தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்கள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கும் திருடப்பட்டிருந்த நிலையில், ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பெங்களூரூவிலுள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கங்காதரன், ஸ்டீபன் ஆகிய இரண்டு பேருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்த இரண்டரை கிலோ தங்க நகையைப் பங்கு பிரிப்பதில் மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த போலீஸார், இது குறித்து தமிழக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். கர்நாடகாவில் முகாமிட்டிருந்த தமிழக போலீஸார் அங்கு விரைந்தனர். கைதானவர்கள் கொடுத்தத் தகவலின்படி, அவர்களது கூட்டாளிகள் கஜேந்திரன், திவாகர் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
கர்நாடக போலீஸார் கைதுசெய்த கங்காதரன், ஸ்டீபன் ஆகிய இருவரையும்… தமிழக போலீஸார் நீதிமன்ற அனுமதியுடன் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ஐந்து நாள்கள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் ஸ்டீபனை பெங்களூரு சிறையில் ஒப்படைத்துவிட்டு, கங்காதரனை விசாரிக்க போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து கங்காதரனை அழைத்துக் கொண்டு பெங்களூரு சென்ற தமிழக போலீஸார், திருடிய தங்க நகைகள் குறித்து விசாரணை செய்தனர். அதில், கங்காதரன் தன்னுடைய மனைவி கீதா (26) , மைத்துனர் ராகவேந்திரர் (25) ஆகியோரிடம் நகைகளைக் கொடுத்தது தெரியவந்தது.
அவர்கள் இருவரும் திருடிய தங்க நகைகளை உருக்கிப் பணமாக்கி, அதில் ஆடம்பர கார் வாங்கி சொகுசாக வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் கைதுசெய்த தனிப்படை போலீஸார், அவர்களிடமிருந்து மூன்று சொகுசு கார்கள், 400 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்தக் குற்ற வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருக்கும் அருண், கவுதம் ஆகிய இருவரை போலீஸார் தீவிரமாகத் தேடிவருவது குறிப்பிடத்தக்கது. நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகையில் இதுவரை 5.1 கிலோ தங்கத்தை போலீஸார் மீட்டிருக்கிறார்கள்.