கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை நடுவே உள்ள பேரிகார்டுகளை அகற்றும்படி, பொதுமக்கள் ஆர்பாட்டம் செய்தனர். கூடுவாஞ்சேரி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜிஎஸ்டி சாலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரயில் நிலையம் செல்லும் சாலையின் குறுக்கே மற்றும் நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே சிக்னல் பகுதியில் பேரிகார்டுகள் மற்றும் தடுப்புகள் போக்குவரத்து போலீசாரால் வைக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக தடுப்புகளை அகற்றும்படி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள், ரயில் நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் சிக்னல் பகுதிக்கு சுமார் 2 கிமீ தூரம் இருசக்கர வாகனங்களில் சுற்றிவரும் அவலநிலை நீடித்தது. கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தபோதும், இந்த தற்காலிக தடுப்புகள் அகற்றப்பட இல்லை. இந்நிலையில், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் ரயில்நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள பேரிகார்டு மற்றும் சாலை தடுப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் உள்ள கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், துணை தலைவர் ஜி.கே.லோகநாதன் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக மீன் மார்க்கெட் சிக்னல் எதிரில் இருந்த பேரிகார்டுகள் மற்றும் சாலை தடுப்புகள் அகற்றப்பட்டன. பின்னர், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் செல்லும் சாலை சிக்னலில் அமைக்கப்பட்டு உள்ள சாலை தடுப்புகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.