வயநாடு: போலீஸ், வழக்குகள் மூலம் என்னை மிரட்ட முடியாது என்று ராகுல்காந்தி தெரிவித்தார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்’ என்று பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம், அதுகுறித்து விசாரிக்க டெல்லி போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். இதுபற்றி கேரள மாநிலம் வயநாட்டில் அவரது எம்பி தொகுதிக்கு உட்பட்ட பல குடும்பங்களுக்கு புதியதாக கட்டிய வீட்டின் சாவியை வழங்கும் விழாவில் ராகுல்காந்தி பேசியதாவது:
பிரதமர், பா.ஜ, ஆர்எஸ்எஸ், காவல்துறையை கண்டு பலர் பயப்படலாம். ஆனால் நான் இல்லை.
நான் அவர்களைக் கண்டு சிறிதும் பயப்படவில்லை. நான் ஏன் பயப்படவில்லை என்பதுதான் அவர்களின் பிரச்னை. காரணம் நான் உண்மையை நம்புகிறேன். நான் எத்தனை முறை தாக்கப்படுகிறேன், எத்தனை முறை என் வீட்டிற்கு போலீசார் அனுப்பப்படுகிறார்கள் அல்லது என் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என்பது முக்கியமல்ல. நான் எப்போதும் உண்மைக்காக நிற்கிறேன். அதுதான் நான். இவ்வாறு அவர் பேசினார்.