மகன் தொடர்ந்து மொபைலில் கேம் விளையாடி வந்ததால் அவனது தந்தை அருணாச்சலம் திரைப்பட ஸ்டைலில் தண்டனை கொடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் படத்தில் ஆசையை விட்டொழிப்பது குறித்த வசனம் இடம்பெற்றிருக்கும். அதாவது தந்தை ரஜினிகாந்த் சுருட்டு பிடிக்க ஆசைப்பட்டதால், அவரது தந்தை அறை முழுக்க சுருட்டு வாங்கி வைத்து குடிக்க வைத்தார்.
அதனால் தந்தை ரஜினிகாந்துக்கு சுருட்டின் மீது உள்ள ஆசையே போய்விட்டது என்று தனது மகனிடம் கூறுவார். அப்படி ஒரு சம்பவம் தான் சீனாவில் நடந்துள்ளது. ஆனால் இது நவீன கால சுருட்டு கதை.
சீனாவின் ஷென்சென் பகுதியை சேர்ந்த ஹுவாங் என்பவரின் 11 வயது மகன் தொடர்ந்து மொபைலில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவரது தந்தை நூதன முறையில் தண்டனை கொடுக்க எண்ணினார்.
எனவே அருணாச்சலம் ரஜினி ஸ்டைலில், மகனை தொடர்ந்து வீடியோ கேம் விளையாட வைக்க முடிவு செய்தார். அதன்படி, மகன் தொடர்ந்து கேம் விளையாடியுள்ளார்.
ஒருகட்டத்தில் சலிப்பு ஏற்படவே சிறுவன் தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் விடாத தந்தை அவரை தொடர்ந்து கேம் விளையாடும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இப்படியே அவர் 17 மணி நேரம் வரை மொபைலில் கேம் விளையாடியுள்ளார்.
தற்போது அந்த சிறுவன் கேம் மோகத்தில் இருந்து வெளியே வந்துவிட்டார். இனி இரவு 11 மணிக்கு முன் படுக்கைக்கு செல்வதாகவும், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு மொபைல் கேம் மற்றும் பொம்மைகளுடன் விளையாட மாட்டேன் என்றும் சிறுவன் உறுதியளித்துள்ளான்.
newstm.in