தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 ஐ நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் அதிக கவனம் பெற்ற இந்த திட்டம் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தகுதி வாய்ந்த குடும்பங்களின் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்த நிதியாண்டில் அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றேன்.
ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலை வாசி உயர்வால் அதிகரித்திருக்கும் குடும்ப செலவு ஆகியவற்றால் அவதிப்படும் நிலையில் மாதம் 1000 ரூபாய் என்பது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என்று சொல்லப்படும் செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் பெருமகன் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி அன்று இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இந்த நிதி ஆண்டில் 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் குடும்பங்கள், வருமான வரி செலுத்தும் குடும்பங்களுக்கு இந்த திட்டம் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.