மதுரை | ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணிற்கு சுகப் பிரசவம்: மருத்துவக் குழுவை பாராட்டிய மேயர்

மதுரை: ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி 30 ஆண்டுகளுக்குப் பிறகு மகப்பேறு சிகிச்சை தொடங்கி, தற்போது முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு சுகப்பிரசிவம் பார்த்த மருத்துவக் குழுவை மேயர் இந்திராணி நேரில் சென்று பாராட்டினார்.

மதுரை மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட 24வது வார்டு பீ.பீ.குளம் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இந்த மருத்துவமனையின் மூலம் இப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் சுமார் 55,000 பொதுமக்கள் பயன்பெறுகின்றனர். இம்மருத்துவமனையில் ஆண்டிற்கு சராசரியாக 760 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சேவை அளிக்கப்படுகிறது.

30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் மகப்பேறு பிரசவ வார்டு அறை வசதி இதுவரை இல்லாமல் இருந்தது. தற்போது 30 ஆண்டிற்கு பிறகு ஒரு பிரசவ வார்டு அறை நிறுவப்பட்டு மகப்பேறு சேவை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கு பணியாற்றும் நகர் நல செவிலியர்களுக்கு மகப்பேறு மற்றும் தாய்சேய் நலம் தொடர்பான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பீ.பீ.குளம் பகுதியில் வசிக்கும் மோகனபிரியா என்ற கர்ப்பிணி பெண் கடந்த 2 நாட்களுக்கு முன் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் செவிலியர் மூலம் கர்ப்பிணி தாய்க்கு பிரசவம் பார்க்கப்பட்டு சுகப்பிரசவம் மூலம் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

தகவல் அறிந்த மேயர் இந்திராணி அந்த மருத்துவமனைக்கு சென்று இந்த மருத்துவமனையில் முதல்முறையாக பிரசவம் பார்த்த மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் பாராட்டினார். மேலும், பிரசவம் பார்த்த பெண்ணிடம் நலம் விசாரித்து தமிழக அரசால் வழங்கப்படும் தாய் சேய் நல பெட்டகத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர் சரவணபுவனேஸ்வரி, சுகாதாரக் குழுத்தலைவர் ஜெயராஜ், நகர் நல அலுவலர் வினோத்குமார், உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.