“மனரீதியா ரொம்ப துன்புறுத்துறாங்க” பணியை ராஜினாமா செய்த தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர்

காவல் ஆய்வாளரொருவர் தனது பாலினம் குறித்தும் சாதி குறித்தும் இழிவாக பேசி மனரீதியாக துன்புறுத்துவதால், தனது காவலர் வேலையை ராஜினாமா செய்யப்போவதாக திருநங்கை காவலர் நஸ்ரியா, கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். புகார் குறித்து துணை ஆணையர் சந்தீஸ் விசாரிப்பார் என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
கோவை மாநகர காவல்துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. தமிழகத்தின் முதலாவது மற்றும் இந்தியாவின் இரண்டாவது திருநங்கை காவலரான இவர், ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், பின் கோவைக்கு கடந்த 2020-ம் ஆண்டு மாற்றப்பட்டார். அதன்படி தற்போது கோவை மாநகர காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
image
இந்நிலையில் திருநங்கை காவலர் நஸ்ரியா, நேற்று முன்தினம் ராஜினாமா கடிதத்துடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “காவல்துறையில் பணியில் சேர்ந்ததில் இருந்து, பல்வேறு அத்துமீறல்களை எதிர்கொண்டு வருகிறேன். தற்கொலை எண்ணங்களுக்கு கூட தூண்டப்பட்டுள்ளேன். அவற்றையெல்லாம் கடந்து பணி செய்துவந்தேன். இந்நிலையில் தற்பொழுது எங்களது பிரிவில் ஆய்வாளராக உள்ள மீனாம்பிகை என்பவர், எனது பாலினம் குறித்தும் சாதி குறித்தும் இழிவாக பேசுகிறார். மனரீதியாக டார்ச்சர் செய்கிறார். விடுப்பில் செல்வது, பணியிட மாறுதலுக்கு முயல்வது என என்னாலான முயற்சிகளை செய்துபார்த்தேன். ஆனால் என்னால் இனி காவல்துறை பணியில் இருக்க முடியாது என்ற நிலைக்கு இப்போது வந்துவிட்டேன். அதனால் எனது வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறேன். அந்த கடிதத்தை கொடுக்கவே காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன்”” என தெரிவித்தார்.
இதனையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் நஸ்ரியாவை அழைத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அப்போது “திருநங்கை காவலர் நஸ்ரியா சொல்லும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டு, புகாரை எழுத்து பூர்வமாக கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
image
திருநங்கை காவலர் நஸ்ரியாவும், எழுத்துபூர்வமான புகார் அளித்தார். இதனிடையே திருநங்கை காவலர் நஸ்ரியா அளித்துள்ள புகார் குறித்து துணை ஆணையர் சந்தீஸ் விசாரிப்பார் எனவும், ஏற்கனவே திருநங்கை காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இருந்தாலும் அவர் தற்போது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய முறையில் விசாரிக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.