மும்பை கிங் சர்க்கிள் பகுதியில் வசிக்கும் ராஜலட்சுமி விஜய் என்ற பெண் தன் கணவருடன் ஒர்லி கடற்கரைப்பகுதியில் நடைபயிற்சிக்காக சென்றார். ராஜலட்சுமியை ஒர்லி கடற்கரை பகுதியில் விட்டு விட்டு, அவரின் கணவர் சிவாஜிபார்க் பகுதிக்கு வந்து நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ராஜலட்சுமி கடற்கரையோரம் இருக்கும் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த டிவைடரில் மோதி மறுமார்க்கத்தில் சென்று கொண்டிருந்த ராஜலட்சுமி(57) மீது பின்புறமாக சென்று மோதியது. இதில் ராஜலட்சுமி பல மீட்டர் உயரத்துக்கு தூக்கிவீசப்பட்டு சாலை டிவைடர் மீது விழுந்தார். காரிலிருந்த நபர் உடனே சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அந்தப் பகுதி மக்கள் டிரைவரை பிடித்துக்கொண்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த பெண் உடனே நாயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டிருந்ததால் உயிரிழந்துவிட்டார். விஜயலட்சுமி தனியார் நிறுவனம் ஒன்றில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். ஓட்டப்பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான ராஜலட்சுமி இந்த ஆண்டு மும்பையில் நடந்த மராத்தான் போட்டியில் கூட கலந்து கொண்டிருக்கிறார். மும்பை கடற்கரையில் ராஜலட்சுமி ஓட்டப்பயிற்சியில் தான் ஈடுபட்டிருந்தார்.
விபத்துக்குள்ளான காரை ஓட்டியவரை பொதுமக்கள் போலீஸாரை வரவழைத்து ஒப்படைத்தனர். அவரின் பெயர் சுமர் மெர்ச்சண்ட் என்று தெரியவந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் அதிகாரி அக்பர் பதான், “டிரைவர் மது அருந்திவிட்டு கார் ஓட்டினாரா என்பதை தெரிந்து கொள்ள ரத்த மாதிரி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. டிரைவர் முந்தைய நாள் இரவு தன் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்திருக்கிறார். இரவு முழுவதும் பார்ட்டி நடந்திருக்கிறது. அதிகாலையில் நண்பர்களை கொண்டு போய்விட காரில் அழைத்துச் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.
காரின் மீட்டரை சோதித்து பார்த்ததில் கார் 100 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மெர்ச்சண்ட் ஓட்டிய கார் மூன்று முறை போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே மெர்ச்சண்ட் டிரைவிங் லைசென்ஸை சஸ்பெண்ட் செய்யும்படி ஆர்.டி.ஓ.விடம் கேட்டுக்கொள்ளவிருக்கிறோம். விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்திருக்கிறோம்.
அதோடு விபத்தை நேரில் பார்த்தவர்களிடமும் வாக்குமூலம் வாங்கியிருக்கிறோம். அதிகமானோர் டிரைவர் குடித்துவிட்டு வேகமாக கார் ஓட்டியதாக தெரிவித்திருக்கின்றனர். இன்று டிரைவர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு மட்டும் மும்பையில் இது வரை 221 பேர் குடித்து விட்டு கார் ஓட்டியதாக பிடிபட்டிருக்கின்றனர்.