தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி:
சமூக மேம்பாட்டிற்காக காமராஜர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. பட்டியலின சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தை திருத்த, அப்போதைய பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தவர் காமராஜர். அந்த பிரிவை சேர்ந்த அமைச்சர்களில், கக்கன் சிறந்து விளங்கினார்; ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தினார்.
உண்மை தான்… அப்படிப்பட்ட ஆளுமைகள் இருந்த தமிழக காங்கிரஸ், இன்று யார் தோள் மீதாவது ஏறி தான் சவாரி செய்யணும்ங்கிற நிலைமையில இருக்கே… ஏன்?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:
பெண் காவலர்கள், சக ஆண் காவல் உயர் அதிகாரிகளால், பாலியல்தொந்தரவுக்கு ஆளாவதாகஅவ்வப்போது செய்திகள் வருகின்றன. சட்டம் – ஒழுங்கை நிலை நாட்டுவதில், குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் பெண் காவலர்களை காக்க வேண்டிய அரசு, கொடுமைக்கு உள்ளாகும் பெண் காவலர்களை பாதுகாக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. அவர்களைபாதுகாப்பது குறித்து ஆராய, அரசு தரப்பில் நிபுணர் குழு அமைத்து, பரிந்துரைகளை பெற்று அமல்படுத்த வேண்டும்.
ஐ.பி.எஸ்., பெண் காவல் அதிகாரிகளுக்கே பாலியல் தொல்லைகள் நடக்கும் போது, சாதாரண பெண் காவலர்களின் நிலை பரிதாபம் தான்!
தமிழக, பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
போலீஸ் நிலையத்தில், தி.மு.க., குண்டர்களால் ஏற்பட்ட, சட்டம் – ஒழுங்கு சீர்குலைவுக்கும், பெண் காவலர் ஒருவரை படுகாயமுறச் செய்த குற்றத்துக்கும், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அமைச்சரும், எம்.பி.,யும், ‘நடந்தது நடந்ததாக இருக்கட்டும்’ என்று சொல்வது அராஜகம்; ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையின் வெளிப்பாடு. நடந்தது குற்றம், கேவலம் என்ற சிறு குற்ற உணர்வை கூட, இருவரும் வெளிப்படுத்தாதது ஜனநாயக படுகொலை. தி.மு.க.,வின் கோர முகம் இது தான்.
அட, நீங்க வேற… நேருவும், சிவாவும் சமாதானம் ஆனதை, தி.மு.க.,வினர் ஏதோ சர்வதேச பிரச்னை முடிவுக்கு வந்த மாதிரி பேசிக்கறாங்களே!
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பேட்டி:
முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்காக டவுன் பஸ்களில் இலவச பயண திட்டம், புதுமை பெண் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறார். பெண்கள், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி போன்ற உயர்ந்த பதவிகளில் பணியாற்ற வேண்டும்; பெண்கள் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதே இந்த அரசின் முக்கிய நோக்கம். சட்டசபை கூட்டத் தொடரில், குடும்ப தலைவியருக்கு மாதம், 1,000 ரூபாய் திட்டம் அறிவிக்கப்படும். இது,’ஓசி’யும் இல்லை; இலவசமும் இல்லை; பெண்களுக்கான உரிமைத்தொகை.
அதை முதல்ல, அமைச்சர்களுக்கு தெளிவா சொல்லுங்க… அவங்க தான், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பெண்களை, ‘நக்கல்’ அடிச்சி பேசுறாங்க!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்