வரதட்சணை கேட்டு நள்ளிரவில் அடியாட்களுடன் சென்று மனைவியின் குடும்பத்தாரை தாக்கிய கணவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புக்கிலிபாளையத்தை சேர்ந்தவர் விஜயன். இவர் மங்களம் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகள் மோகனப்பிரியாவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மோகனப்பிரியா, தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஒரு வருடத்திற்கு முன்பு விஜயனை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் திருமணமான நான்கு மாதங்களில் விஜயன் தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக மோகனப்பிரியா பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக பல்லடம் மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று இரவு 4 – 5 அடியாட்களுடன் மோகனப்பிரியாவின் வீட்டிற்குள் புகுந்த விஜயன், மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தார் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் காயமடைந்த மோகனப்பிரியாவின் தந்தை மூர்த்தி, மற்றும் அவரது தாய் ஆகியோர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து விஜயன் மோகனப்பிரியாவின் வீட்டில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களது எதிர்ப்பைமீறி காதல் திருமணம் செய்தகொண்டது மட்டுமல்லாமல் தற்போது ஒரு வருடத்திலேயே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக விஜயன் மீது மோகனப்பிரியாவின் தந்தை புகார் கொடுத்துள்ளார். விஜயன் மீது நடவடிக்கை எடுத்து தனது மகளின் வாழ்க்கையை காப்பாற்றுமாறும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் மோகனப்பிரியாவின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM