புதுச்சேரியில் வீட்டு வாசலில் நின்றிருந்த தொழிலதிபரிடம் விலாசம் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி வீட்டிற்குள் புகுந்து ரூ.36 லட்சம் பணம் மற்றும் 80 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ரெயின்போ நகர் 6-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி (60). மதுபானக் கடை மற்றும் இறால் பண்ணை வைத்திருக்கும் தொழிலதிபரான இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பு வந்தபோது காரில் வந்த 3 பேர் விலாசம் கேட்பது போல் நடித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி வாயில் துணியை கட்டி வீட்டினுள் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அவரை தாக்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.36 லட்சம் பணம் மற்றும் 80 சவரன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர், இது தொடர்பாக அவர் பெரியகடை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் கண்காணிப்பாளர் ஸ்வாதி சிங், ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர், மேலும் கருணாநிதியின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதால் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM