விஷ்ணுவர்தனின் படத்தில் அதிதி To மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. டாப் 10 சினி ஹைலட்ஸ்!

இன்று உலா வரும் சில சினிமா தகவல்களின் தொகுப்பை இங்கு சுருக்கமாக காணலாம்:

1. விஜய் சேதுபதியின் புதிய படம்

‘பார்ஸி’ வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ‘விடுதலை 1 & 2’, ‘பிசாசு 2’, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’, ‘காந்தி டாக்ஸ்’, ‘மும்பைகார்’, ‘ஜவான்’ உள்ளிட்டப் படங்கள் லைனில் காத்துள்ளன. இதில் சில படங்களின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில படங்களின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படத்தைத் தொடர்ந்து, புதியப் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் சென்னையில் படம் பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

image

2. விஷ்ணுவர்தனின் படத்தில் அதிதி ஷங்கர்

இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் அவரின் நடிப்பு மற்றும் நடனம் பெரிதும் கவர்ந்த நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் அதர்வாவின் இளைய சகோதரர் ஆகாஷ் முரளி அறிமுகமாகும் புதியப் படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

3. ஒரே இரண்டு படங்களில் இயக்குநர் ஷங்கர்!

‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரணின் ‘ஆர்.சி. 15’ ஆகிய 2 படங்களையும் ஒருசேர எடுத்து வரும் இயக்குநர் ஷங்கர், ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை சென்னையில் முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறு ஓய்வுக்குப் பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ராம் சரணின் ‘ஆர்.சி. 15’ படத்தை இயக்க இயக்குநர் ஷங்கர் சென்றுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷங்கர் பகிர்ந்துள்ளார்.

4. உலகம் முழுக்க பறக்கும் ‘காந்தாரா’ திரைப்படம்

இத்தாலி மற்றும் ஸ்பானீஷ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘காந்தாரா’ திரைப்படம், அந்நாடுகளில் உள்ள திரையரங்குகளில் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார். சர்வதேச ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் படம் அம்மொழிகளில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ள ரிஷப் ஷெட்டி, ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

5. ரஜினியுடன் நடிப்பது என் கனவு – கன்னட நடிகரின் ஆசை 

கன்னட திரையுலகின் பிரபல நடிகரான உபேந்திராவின் ‘Kabzaa’ திரைப்படம் கடந்த 17-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது தனது வாழ்வின் மிகப் பெரிய கனவு என்று தெரிவித்துள்ளார். தான் மட்டும் அவ்வாறு ஆசைப்படவில்லை என்றும், பெரும்பாலான நடிகர்களின் கனவு அது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

image

6. நடன இயக்குநரின் இயக்கத்தில் கவின்?

கவினின் புதியப் படத்தை நடன அமைப்பாளரும், நடிகருமான சதீஷ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் பரவி வருகிறது. நடிகை பிரியங்கா மோகன் தற்போது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

image

7. ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையும் இயக்குநர் செல்வராகவன்?

‘ரன் பேபி ரன்’ படத்தை அடுத்து ஆர்.ஜே. பாலாஜி அடுத்ததாக கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி, கருணாஸ் மற்றும் யோகி பாபு ஆகியோருடன் இணைந்து ‘சொர்க்கவாசல்’ படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன், இயக்குநர் செல்வராகவனும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8. புதிய படத்திற்காக வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் நடிகர் மாதவன்!

‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படத்தில் நடித்தது மட்டுமின்றி முதல்முறையாக அந்தப் படத்தை நடிகர் மாதவன் இயக்கியிருந்தார். பெரும்பாலானவர்களின் பாராட்டைப் இந்தப் படம் பெற்றிருந்த நிலையில், அடுத்ததாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், இந்த புதியப் படத்தில் நடிப்பதற்காக வித்தியாசமான ஹேர் ஸ்டைலை உருவாக்கும் வகையில், விதவிதமான ஹேர் ஸ்டைலை தனது தந்தையை வைத்து சோதனை செய்யும் புகைப்படங்களை நடிகர் மாதவன் பகிர்ந்துள்ளார்.

image

9. ஏ.ஆர்.ஆர் ஹார்டின் விட்ட மலையாள சூப்பர் சிங்கர்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘தில்சே’ படத்தில் பாடிய பாடலை, அப்படியே மலையாள சேனல் ஒன்றின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய போட்டியாளர் ஒருவர், நடுவர்களின் பாராட்டுக்களை பெற்றார். இந்த வீடியோ வைரலான நிலையில், அதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி எமோஜிக்களை பறக்கவிட்டுள்ளார்.

10.  ‘இராவண கோட்டம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகனான சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இராவண கோட்டம்’. இந்தப் படத்தை ‘மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கியுள்ளார். ‘கயல்’ ஆனந்தி, பிரபு, இளவரசு, தீபா ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் மே 12-ம் தேதி வெளியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.