கொல்கத்தா: ‘வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிப்பதில் பிராந்திய கட்சிகளே முக்கிய பங்கு வகிக்கும்’ என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார். உபி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டி : பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகிய ஒவ்வொருவரும் எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வரும் நாட்களில் பாஜவை எதிர்த்து போராடக் கூடிய வலுவான கூட்டணி உருவாகும் என நம்புகிறேன்.
பிராந்தியக் கட்சிகள் தான் பாஜவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றன. எனவே, 2024 மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிப்பதில் பிராந்திய கட்சிகள் தான் முக்கிய பங்கு வகிக்கும். அதை பிராந்திய கட்சிகள் வெற்றிகரமாக செய்து முடிக்கும் என நம்புகிறேன். சில மாநிலங்களில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளன.
எனவே மக்களவை தேர்தலுக்கான கூட்டணி சேரும் போது இது முக்கிய கேள்வியாக எழும். கூட்டணியில் தனது பங்கு குறித்து காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் தனது ஆட்சிக்காலத்தின் கடைசியில் விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்தியது. அதே போல இப்போது பாஜவும் செய்கிறது. எனவே காங்கிரசை போலவே பாஜவின் கதையும் விரைவில் முடிவுக்கு வரும் என்றார்.