”500 ரூபாய் நோட்டுகளை விட 2,000 ரூபாய் நோட்டுகளின் பணப்புழக்கமே அதிகம்”- நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் 2000ரூ நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி மக்களவையில் வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.
ஒட்டுமொத்த இந்திய மக்களும் மறக்கவே முடியாத அந்த நாள்!
பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்த பிறகு 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி கருப்பு பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து உலக அளவில் பெரும் பரபரப்பை கிளப்பினார் பிரதமர் மோடி. இந்த ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய வடிவிலான 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்படும் என்றும், 2,000, 200 மற்றும் 20 ரூபாய் நோட்டு என்ற புது ரூபாய் தாளையும் நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர். பின்னர் புதிய 500 ரூபாய் நோட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
image
2016ம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி ஆற்றிய உரையும், அதன் பிறகு சில மாதங்களுக்கு அந்த நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கமும் இன்றளவும் பலரது நினைவில் இருந்து நிச்சயம் மறந்திருக்காது. அப்படியான ஒரு திடீர் நடவடிக்கைதான் அது.
புழக்கத்தில் மெல்ல மெல்ல மறைந்து போகும் 2000 ரூபாய் நோட்டுகள்!
இதனையடுத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 2000 ரூபாய் மற்றும் புதிய 500 ரூபாயை மட்டும் புழக்கத்தில் விடப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் காணவே முடியவில்லை. ஏடிஎம்களில் கூட 500, 200, 100 ரூபாய் நோட்டுகள்தான் பெரும்பாலும் வருகிறது. வங்கிகளிலும் மிகக் குறைந்த அளவிலேயே 2000 ரூபாய் நோட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. அப்படி என்றால் அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே போனது தொடர்ச்சியாக நோட்டுகள் அச்சிடப்படுகிறதா இல்லையா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்தது.
image
மாநிலங்களவையில் எழுப்பட்ட கேள்வி?
2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை மத்திய அரசு நிறுத்திவிட்டதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் சந்தோஷ் குமார் போன்ற உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வியை எழுப்பியிருந்தனர். அதில், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுவிட்டதா? புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டிருந்தது.
image
அதற்கு பதிலளித்து இருந்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளே போதுமானது என்பதால் 2019-20ம் நிதியாண்டு முதலே நாட்டில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதாகவும், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடக் கூடிய எந்த திட்டமும் இப்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை என்றும் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!
இந்நிலையில் இதுகுறித்து மக்களவையில் பேசியிருக்கும் நிர்மலா சீதாராமன், ”பண மதிப்பிழப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது என்ற தகவல் மத்திய அரசிடம் இல்லை. அதே நேரத்தில் 2017 மார்ச் முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 9.512 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளும், 27.057 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளும் மக்களிடையே புழக்கத்தில் உள்ளதாக” தெரிவித்துள்ளார்.
image
அதாவது நாட்டில் 500 ரூபாய் நோட்டுகளை விட 2,000 ரூபாய் நோட்டுகளின் பணப்புழக்கமே அதிகம் உள்ளது மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதில் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ஏடிஎம்-களில் ரூ.2000 நோட்டுகளை நிரப்பாதது குறித்து வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் மத்திய அரசு வழங்கவில்லை என்று தெரிவித்த அவர், கடந்தகால பயன்பாடு, மக்களின் தேவை, நிகழ்கால போக்கு போன்றவற்றின் அடிப்படையில் ஏடிஎம்களுக்கான தொகை மற்றும் மதிப்பின் தேவையை வங்கிகள் தாங்களாகவே மதிப்பீடு செய்கின்றன” என்று நிதியமைச்சர் பதிலளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.