பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப்’ திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி மெகா ஹிட்டானது. இந்த இரண்டு பாகங்களிலும் நடிகர் யஷ்ஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்திலும் நடித்திருந்தார். ‘கே.ஜி.எஃப்’ படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே ‘கே.ஜி.எஃப்’ படப்பிடிப்பில் ஸ்ரீநிதி ஷெட்டியை யஷ் துன்புறுத்தி தொல்லை செய்ததாகவும், அவருடன் தவறாக நடந்துகொண்டதாகவும் இதனால் ஸ்ரீநிதி ஷெட்டி, யஷ் உடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்ரீநிதி ஷெட்டியே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். ‘கே.ஜி.எஃப்’ படத்தில் நடிகர் யஷ் உடன் பணியாற்றியது உண்மையிலேயே ஒரு பாக்கியம்தான். அவர் ஒரு ஜென்டில்மேன் மற்றும் சிறந்த வழிகாட்டி. படப்பிடிப்பில் யஷ் உடன் நடிக்கும்போது எனக்கு எந்த அசௌகரியங்களும் ஏற்படவில்லை. ‘கே.ஜி.எஃப்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது. நான் எப்போதும் யஷ்ஷின் ரசிகையாகவே இருப்பேன்!” என்று தெரிவித்துள்ளார்.