தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 10 மணி தொடங்கி 2023 – 24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். குறிப்பிட்ட அந்த உரையின் போது அவர் பேசியவை இங்கே:
“சமூகத்தில் சரிபாதியான பெண் இனத்தை, சரிநிகர் சமூகமாக உயர்த்த திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசு, கல்வியில் – நிர்வாகத்தில் – அதிகாரமிக்க பொறுப்புகளில் – பொருளாதாரத்தில் – சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களை, ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்துவருகிறோம். மகளிருக்கு சொத்துரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் தனி இட ஒதுக்கீடு அளித்தது முதல் இன்று கட்டணமில்லா பேருந்து வழங்கியது வரை எப்போதும் அவர்களை மேம்படுத்த செயல்படுத்தி வருகிறோம்.
அந்தவகையில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற இலக்கணப்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல, சொல்லாத பல நல திட்டங்களையும் செய்துவருவோர் என்று மாமன்ற உறுப்பினர்கள் அறிவீர்கள். அதன்படி மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவைதான். இத்தகையை புதுமையான திட்டங்களை செயல்படுத்திய நம் முதல்வர், மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவோம் என்ற வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்.
#BREAKING | குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – செப்.15ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்#BUDGET | #TNBudget2023 | #PTRPalanivelThiagarajan | #MKStalin | #BudgetwithPT pic.twitter.com/i4tEQ5ggcd
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 20, 2023
அதன்படி, வரும் நிதியாண்டில் தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். ஒன்றிய அரசால் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரித்த குடும்ப செலவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத்தலைவிகளுக்கு, மாதந்தோறும் 1,000 ஆயிரம் ரூபாய் பெரும் உதவியாக இருக்கும்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில் திராவிட இயக்க மாதம் என சொல்லப்படும் செப்டம்பர் மாதத்தில், தாய்த்தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் பெருமகன் அண்ணாவின் பிறந்தநாளான செப்.15 முதல் முதல்வரால் கொண்டுவரப்படும். புரட்சியை ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM