TN Budget 2023: தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் மின்னணு வடிவில் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு புதிய மற்றும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் என கல்விசார்ந்த அறிவிப்புகளும், இதுவரை அத்திட்டங்களால் ஏற்பட்ட பயன்களையும் நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், இந்தாண்டு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள கல்வி சார்ந்த அறிவிப்புகளையும், அதுகுறித்த விவரங்களையும் இதில் காணலாம்.
உயர்கல்வி திறன்மேம்பாடு
71 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் திறன்மையங்களாக மாற்றும் திட்டம் நான் முதல்வன் திட்டம் மூலம் கொண்டுவரப்படும். இது, அனைத்து பொறியியல், கலை அறிவியல் கல்லுாரியிலும் செயல்படுத்தப்படுகிறது. இதனால், 12.7 லட்ச மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இளைஞர்களுக்கு தொழிற்சாலையில் பயிற்சி அளிக்க ரூ. 25 கோடியில் திட்டம் கொண்டுவரப்படும். கிருஷ்ணகிரியில் ரூ. 80 கோடி மதிப்பீட்டில் அதி நவீன திறன்மேம்பாட்டுத் திட்டம், குடிமைப்பணியில் சேரும் தமிழ்நாட்டு மாணவர்களை அதிகரிக்க, 1000 மாணவர்களுக்கு 7 ஆயிரம் ருபாய் ஊக்கத்தொகையுடன் 10 மாதம் பயிற்சி அளிக்கப்படும்.
உயர்கல்வித்துறையில் மாணவிகள்…
உயர்கல்வித்துறைக்கு 6 ஆயிரத்து 967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 29 சதவீதம் உயர்ந்துள்ளது. உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் இந்த 29 சதவீதம் வருகை அதிகரித்துள்ளது. சுமார் 20 ஆயிரத்து 477 மாணவிகள் புதிதாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். தற்போது, 2.2 லட்சம் மாணவிகளுக்கு இத்திட்டத்தில் ரூ.1000 வழங்கப்படுகிறது.
காலை உணவு திட்டம்
அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இந்த 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. அதாவது, காலை உணவு திட்டத்தால் 1, 319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவு திட்டத்தால் தொடக்கப்பள்ளி மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.