TN Budget 2023 AIADMK Walkout: தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 20) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணியளவில் பேரவை தொடங்கியதும், துறை வாரியான நிதி அறிக்கையை தாக்கல் செய்தார்.
முன்னதாக, சட்டப்பேரவை தொடங்கியதும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்தனர். தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
குறிப்பாக, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முறைகேடு செய்து திமுக வெற்றி பெற்றதாக குற்றஞ்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக, அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில்,”ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, வாக்களர்களை ஆடுமாடுகளை பட்டியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி, அச்சுறுத்தி வாக்களிக்கச் செய்தது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை.
மேலும், விலைவாசி உயர்வு, பால்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், இன்னும் பல்வேறும் பிரச்னைகளை முன்வைத்தும் வெளிநடப்பு செய்யப்பட்டது” என அறிவித்துள்ளனர். மேலும், இதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.
தற்போது, பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, காலை உணவு திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அத்திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காகிதமில்லாத சட்டப்பேரவையை முன்னிட்டு, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள்களுக்கு நடைபெறும் என்பது பட்ஜெட் தாக்கலுக்கு பின், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு, இன்று அறிவிக்கப்படும் என்பது நினைவுக்கூரத்தக்கது.