தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
அதில் ஒரு முக்கிய அறிவிப்பாக, சிங்காரச் சென்னையில் உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி மறுசீரமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சிகளின் முதற்கட்டமாக 44 கிலோ மீட்டர் நீளமுடைய அடையாறு ஆற்றின் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் எழில் கொஞ்சும் பூங்காக்கள், பசுமை நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், தரமான அருந்தகங்கள் போன்ற கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்கள் அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும்.
இத்திட்டம் அரசு -தனியார் பங்களிப்புடன் ஏறத்தாழ 1500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
மண் சாலைகள் :
நகர்ப்புற உள்ளாட்சிகளை தரம் உயர்த்தியதன் காரணமாக, அருகில் இருக்கும் புறநகர் பகுதிகளும் அவற்றோடு இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள மண் சாலைகளை தர உயர்த்துவது அவசியமாகும்.
இப்பகுதிகளில் 4540 கிலோமீட்டர் நீளமுள்ள மண் சாலைகளில், 1233 கிலோமீட்டர் மண் சாலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளால் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
வரும் ஆண்டில் 1424 கிலோமீட்டர் மண் சாலைகள் மொத்தம் 1200 கோடி ரூபாய் செலவில் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும்.
சென்னை பொதுக்கழிவறை :
நகர்ப்புற உள்ளாட்சிகளில் பொது கழிவறைகளின் செயல்பாட்டையும், பராமரிப்பையும் மேம்படுத்த அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய பொது கழிப்பறைகள், சமுதாய கழிப்பறைகள் கட்டுதல், இயங்கி வரும் கழிப்பறைகளை சீரமைத்தல் ஆகியவற்றின் பராமரிப்பு ஆகிய பணிகள் 430 கோடி ரூபாய் செலவில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பும் மூலம் ஒரு முன்னோடி திட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் வெற்றியின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள பிற மாநகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்று பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்துள்ளார்.