அதிகரித்து வரும் பூஞ்சைத் தொற்று ஒன்று தொடர்பில் அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உலகம் பெரும்பாலான நோய்களுக்கு ஆன்டிபயாட்டிக் முதலான மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளது உண்மைதான். ஆனால், சில நோய்க்கிருமிகள் மருந்துகளுக்கு அடங்குவதில்லை.
மருந்துகள் பயன்படாததால் ஏற்படும் பயங்கர விளைவுகள்
2019ஆம் ஆண்டு, இப்படி மருந்துகளுக்கு அடங்காத நோய்க்கிருமிகளால் 1.27 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளார்கள். அதாவது, ஹெச் ஐ வி (864,000 பேர் பலி) மற்றும் மலேரியா (643,000 பேர் பலி) ஆகிய நோய்களால் பலியானவர்களைவிட, இந்த மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்க்கிருமிகளால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்!
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு
அமெரிக்காவின் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு மையங்களின் ஆய்வாளர்கள், சமீபத்திய ஆண்டுகளாக கேண்டிடா ஆரிஸ் (Candida auris (C. auris) என்னும் நோய்க்கிருமியால் ஏற்படும் தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
Credit: Getty – Contributor
அமெரிக்காவின் பாதி மாகாணங்களில், ஏன் அதைவிட அதிகமாகவே தற்போது இந்த கேண்டிடா ஆரிஸ் என்னும் கிருமித் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுடைய வயதானவர்களை பாதிக்கும் இந்த கேண்டிடா ஆரிஸ் என்னும் பூஞ்சை, உலக சுகாதாரத்துக்கு மோசமான அச்சுறுத்தல் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பூஞ்சை, சாதாரணமாக பயன்படுத்தப்படும் பூஞ்சைக் கொல்லி மருந்துகளைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சைக்கு கட்டுப்படுவதில்லை என்பதுதான் முக்கிய பிரச்சினை.
அத்துடன், ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இந்த கிருமி தாக்குவதால், ஒருவருக்கு இந்த கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடிப்பதும் கடினமான விடயமாக உள்ளது.
எல்லாவற்றையும் விட மோசமான செய்தி என்னவென்றால், இந்த கேண்டிடா ஆரிஸ் கிருமித் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் உயிரிழந்துவிடுவார்கள் என்பதுதான்!