தமிழில் `ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி `கேம் ஓவர்’, `ஆரம்பம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இந்தியில் `பிங்க்’, `தப்பட்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் , நடிப்புத்துறையில் கரியரை தொடங்குவதற்கு கடினமான பல சூழல்நிலைகளைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் நடிகை டாப்ஸி.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் தன் இளமையான தோற்றத்தால் புடவை பிராண்ட் ஒன்றில் இருந்து நிராகரிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அவர் பேசும்போது, “ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்க என் தாயார் நிதியுதவி செய்தார். அதன் பிறகுதான் எனக்கு சில விளம்பர வாய்ப்புகள் வந்தன. அந்நாள்களில் ஒரு பெரிய சேலை பிராண்டின் ஷூட்டிற்காக என்னை அணுகினார்கள். ஆனால் நான் மிகவும் சிறுவயதுப் பெண்ணாக இருப்பதாகக் கூறி என்னை நிராகரித்து விட்டனர். அப்போதுதான் நான் இரண்டாம் ஆண்டு கல்லூரிப் படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் `பெண்’ போல தோற்றமளிக்கும் ஒருவரை விரும்பியுள்ளனர், ஆனால் நானோ மிக இளம் வயதுப் பெண்ணாக இருந்தேன்” என தெரிவித்துள்ளார்.
விரைவில் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணியின் `டன்கி’ படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் டாப்ஸி. அது பற்றி பேசிய அவர், “ராஜு சார் மற்றும் ஷாருக் சார் ஆகிய இருவரும் இணைந்து வேலை செய்யும் படத்தில் என்னை, பின்னால் மரம் போல நிற்கச் சொன்னாலும் நிற்பேன். ஆனால், இந்தப் படத்தில் வலிமையான காதல் கதை உள்ளது. கதாநாயகிக்கும் வலிமையான கதாபாத்திரமும் உள்ளது. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன்.
இந்தத் துறையில் பத்து வருடங்கள் பணியாற்றிய பிறகு எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குநர் மற்றும் ஹீரோவிடம் இருந்து தினமும் பல புதிய விஷயங்களை கற்றுக்கொண்டுதான் நான் வீட்டுக்குச் செல்கிறேன்” என பேசியுள்ளார்.