ஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களாயின், அவ்வாறான இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்படும் – கல்வி அமைச்சர்

ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துமாயின், அவ்வாறான இடமாற்றங்கள் மேலும் ஒத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆசிரியர் இடமாற்றங்களினால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பாரியளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் பணிபுரியும் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் இடமாற்றங்களினால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமாயின், அவ்வாறான இடமாற்றங்கள் மேலும் ஒத்திவைக்கப்படும். எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அல்லது உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே இவ்வாறு இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் இடமாற்றங்கள், பாடத்திற்கு ஏற்ப முறையான முறையில் மேற்கொள்ளப்படும். 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்காகவே இந்த ஆசிரியர் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி 8,893 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளன. அவர்களில் 681 பேர் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள். அதில் 388 கடிதங்கள் ஏற்கனவே தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. மீதமாக உள்ள 293 கடிதங்களையும் இன்று தபாலிட உள்ளோம். ஏனைய கடிதங்களை ஏப்ரல் விடுமுறைக்குப் பின்னர், தபாலில் அனுப்ப எதிர்பார்த்துள்ளோம் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், 2020, 2021, 2022 ஆகிய மூன்று வருடங்களிலும் ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ள முடியவில்லை. இந்த வருட இறுதியில் 14,500 ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள் கிடைத்துள்ளன. இந்த இடமாற்றங்கள் பாடங்களின் வகைகளுக்கு அமைய முறையாக மேற்கொள்ளப்படும். ஒரே பாடசாலையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் கண்டிப்பாக இடமாற்றம் செய்யப்படுவார்கள். இந்த மூன்று ஆண்டுகளிலும் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படாமையினால், இம்முறை இடமாற்றம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

இதுவரை மொத்தமாக 8093 ஆசிரியர்களுக்கு இடமாற்ற அனுமதி கிடைத்துள்ளன. இதில் 681 ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 388 பேருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய மேல்முறையீடு செய்த ஆசிரியர்கள் தவிர ஏனைய ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.