“ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வங்கி தொடங்கி, அனைத்துக்கும் ஆதார் கார்டு அவசியமானதாக உள்ளது. ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. குறிப்பாக, வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு ஆதாருடன் இணைக்காதவர்கள், 2023, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தங்கள் பான் கார்டை எந்தவிதமான பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியாது. இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், 10 இலக்க பான் எண் செயலிழந்துவிடும். ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைக்காதவர்கள் வருமானவரி ரிட்டனையும் தாக்கல் செய்யமுடியாது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க தற்போது விரும்புபவர்கள் அபராதமாக ரூ.1000 செலுத்த வேண்டும். 2022, ஜூன் 30 வரை இந்த கட்டணம் ரூ.500 ஆக இருந்தது. அதன்பின் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், ”இந்தியாவில் இணையவசதிகள் அரிதாகவே கிடைக்கக்கூடிய பல பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களுடைய நிலைமை ஒரு கனவாகவே இருக்கிறது. இத்தகைய வசதிகள் இல்லாததால் பெரும்பாலான மக்கள் துயரத்தை அனுபவிக்கின்றனர்.
மேலும், பல போலியான இணையதள நிறுவனங்கள், இதன்மூலம் அப்பாவி மக்களிடமிருந்து பணத்தை மட்டுமே பறிக்கின்றன. ஆகையால், மக்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் இலவசமாக பான் கார்டை இணைப்பதற்கு வசதியாக, மேலும் 6 மாதங்களுக்கு காலக்கெடுவை நீட்டிக்கும் வகையில் தாங்கள் வருவாய்த்துறைக்கும், நிதியமைச்சகத்துக்கும் அறிவுறுத்த வேண்டுகிறேன். உள்ளூர் மற்றும் துணை தபால் நிலையங்கள் இந்த சேவையை, இலவசமாகச் செய்திடுமளவுக்கு தாங்கள் ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM