ஆன்லைன் சூதாட்டத்தில் முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம்? – மத்திய அரசு கொடுத்த விளக்கம்!

ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்பிற்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்ற அதிகாரம் உள்ளது என மக்களவையில் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டங்களை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும், இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. ஆளுநர் இந்த விவகாரத்தில் தாமதம் செய்து வருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், சரியாக சட்டம் கொண்டு வராவிட்டால் பின்னால் ரத்தாகும் நிலை வரும் என சிலர் கூறுகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் நின்றபாடில்லை. இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் ஒலித்தது.
நாடாளுமன்றத்தில் ஒலித்த ஆன்லைன் சூதாட்ட விவகாரம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய தகவல் & ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் எழுத்துப்பூர்வ விளக்கமளித்துள்ளார்.
அதில், ”பந்தயம் & சூதாட்டம் இரண்டும் இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் வருகிறது. ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டங்களை சமாளிக்கவும் அதனை மாநில அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்றி உள்ளன” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில் திறன் அடிப்படை விளையாட்டு, சூதாட்ட அடிப்படை விளையாட்டு என்பதை உச்சநீதிமன்றம் வகைப்படுத்தி இருப்பதாகவும் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
image
இதனை ஆளுநருக்கு அறிவுறுத்தச் சொல்லுங்கள் – திமுக
இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், “உண்மையில் இது வரவேற்கவேண்டியது. இதனை ஆளுநரிடம் அறிவுறுத்தவேண்டும். சில பிரச்னைகளுக்கு மாநில அளவிலேயே முடிவெடுப்பது என்பது நெடுங்காலமாகவே இருந்துவருகிறது. குறிப்பாக மது விலக்கு கொள்கையை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யும். அதேபோல லாட்டரி சீட்டு கொள்கையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யும். அதேபோல் ஆன்லைன் சூதாட்டம் குறித்த கொள்கை முடிவும் அந்தந்த மாநில அரசிடம்தான் இருக்கவேண்டும்.
அவராலேயே(ஆளுநர்) நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்தை, சட்ட வடிவில் செல்லும்போது மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று தெரியவில்லை. அதற்கு காரணமாக, மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வியை அவரே எழுப்புகிறார். இது புரியாத புதிராக இருக்கிறது. எனவே மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை மத்திய அரசு அவருக்கு அறிவுறுத்தவேண்டும். ஏனென்றால் இது மாநில அரசின் உரிமை.
திமுக அரசு மறுபடியும் சட்டம் இயற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பிவைப்போம். சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. ஏனென்றால் 65 பேருக்கு மேல் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். இந்த மரணத்தை தடுக்கவேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது என்பதால் மறுபடியும் நாங்கள் இந்த சட்டத்தை நிறைவேற்றி அனுப்பிவைப்போம். விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவுகட்டுவோம்” என்று கூறியுள்ளார்.

ஆளுநர் எதற்காக திருப்பி அனுப்பினார்? அது மர்மமாகவே இருக்கிறது – அதிமுக
image
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “ஆன்லைன் ரம்மி என்பது ஒட்டுமொத்த உலகத்துக்கும், இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் தேவையில்லை. தமிழ்நாட்டில் பலபேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனை முழுவதுமாக தடைசெய்யவேண்டும் என்ற முனைப்போடு சட்ட வல்லுநர்கள் உதவியுடன் ரம்மியை தடைசெய்யும் ஒரு சூழ்நிலையை அரசு நினைத்தால் நிச்சயம் உருவாக்கலாம். மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட விஷயம் என்ற அடிப்படையில்தான் எங்களுடைய ஆட்சிகாலத்திலேயே ஒரு சட்டம் இயற்றி, ஆளுநரின் ஒப்புதலையும் பெற்று, நீதிமன்றம் ரத்துசெய்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று சொன்னார்களா அல்லது அதனை சொல்ல தவறிவிட்டார்களா? அதன் அடிப்படையில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி ஆளுநர் அதனை தெளிவுபடுத்துமாறு திருப்பி அனுப்பினாரா? போன்றவை மர்மமாகவே இருக்கிறது. மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசு சொல்கிற இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இதன் அடிப்படையில் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கவேண்டும். ஆளுநர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய, ’மெய்ப்பிக்கும் சுமை’யானது மாநில அரசை சேர்ந்தது என்பதால், மாநில அரசுக்குத்தான் உரிமை இருக்கிறது.

ஆகவே நாங்கள் மசோதாவை திருப்பி அனுப்புகிறோம் என்று சொல்லி அதனை அனுப்பிவைத்தால் நல்லது. மத்திய அரசும் இவ்வாறு கூறியுள்ள நிலையில் பல உயிர்கள் போகாமல் இருக்க, காலம் தாழ்த்தாமல் ஆன்லைன் ரம்மி சூதாட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்றி, இதனை தடைசெய்ய அரசு முழு வீச்சோடு முயற்சி எடுத்து செயல்படுத்தவேண்டும்” என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.