இன்று தாக்கல் செய்யப்படவிருந்த டெல்லி பட்ஜெட் , மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் நிறுத்தி வைக்கப்படுகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார்
டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 17ஆம் தேதி தொடங்கியது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு, நிதித்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட கைலாஷ் கெஹ்லோட், கடந்த மார்ச் 10ஆம் தேதியே பட்ஜெட் தொடர்பான கோப்புக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
அதன்பின் பட்ஜெட் தொடர்பாக சில காரணங்களை கூறிப்பிட்டு, மார்ச் 17 அன்று டெல்லி தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதமொன்று அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அக்கடிதத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுத்திருப்பதாக கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்தார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அமைந்ததில் இருந்து இதுவரை 8 ஆண்டுகளாக தொடர்ந்து நிதி அமைச்சராக மணீஷ் சிசோடியா பட்ஜெட் தாக்கல் செய்து வந்தார். பிப்ரவரி 26ஆம் தேதி கலால் கொள்ளை முறைகேடு வழக்கில் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் இந்த ஆண்டு அவர் தாக்கல் செய்யவில்லை. கைதான பின், பிப்ரவரி 28ஆம் தேதி மணீஷ் சிசோடியா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் டெல்லி பட்ஜெட்டின் முழுவடிவமும் மணீஷ் சிசோடியா தலைமையில்தான் தயாரிக்கப்பட்டது. சிறைக்குச் செல்வதற்கு முன், இந்த பட்ஜெட் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் மணீஷ் சிசோடியா முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பட்ஜெட் தாக்கல் தள்ளிப்போயுள்ளது. மத்திய அரசின் ஓப்புதல் இல்லாதலால் டெல்லி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படாது என்றும் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யபடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM