கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் ஜெகன் (28). இவர் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர்கள் 2 பேரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் ஜெகன் – சரண்யா ஆகியோர் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்த காதல் விவகாரம் சரண்யாவின் வீட்டுக்கு தெரியவந்துள்ளது. இதை கேட்ட சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஜெகனை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. சரண்யாவை காதலிப்பதை கைவிட வேண்டும் என கூறியுள்ளனர். இருப்பினும் ஜெகனும், சரண்யாவும் காதலில் உறுதியாக இருந்துள்ளனர். அதேபோல் இவர்களின் காதலை பிரிப்பதில் சரண்யாவின் குடும்பத்தினரும் தொடர்ந்து பல வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சரண்யாவின் குடும்பத்தினர் தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு இருவரும் தனியாக வசிக்க தொடங்கினர். இருப்பினும் ஜெகன் மீது சரண்யாவின் தந்தையான சங்கருக்கு கோபம் குறையவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மதியம் ஜெகன் கேஆர்பி டேம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சரண்யாவின் தந்தையும், ஜெகனின் மாமனாருமான சங்கர் உள்பட 3 பேர் அவரை வழிமறித்து நடுரோட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்தனர். காதல் திருமணத்தை ஏற்காத மனநிலையில் இருந்த சங்கர் இதனை ஆணவக்கொலையாக செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கொடூரக்கொலை குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஜெகன் வெட்டிக்கொலை செய்யப்படும் வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி ரோட்டில் விழுந்து கிடந்த ஜெகனை, 3 பேர் சுற்றி நின்று அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். ஒருவர் கையை பிடித்து கொள்ள மற்றொருவர் காலை பிடிக்க மீதமுள்ள நபர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
இந்த கொடூரமான கொலை நடக்கும் சமயத்தில் அந்த சாலையில் சிலர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பயத்தில் திரும்பி செல்ல.. மேலும் சில மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் வேடிக்கை பார்த்தது தெரியவந்துள்ளது. ஒருவேளை இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்து இருந்தால் ஜெகன் தப்பித்து இருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.