நடிகையும், அரசியல் வாதியுமான விஜய் சாந்தி ஓ.டி.டி.யில் வெளியாகும் வெப் சீரிஸ்களில் ஆபாச காட்சிகள் அதிகரித்து கொண்டே வருகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ சமீபத்தில் வெளியான வெப் சீரிஸில் அதிக அளவில் ஆபாசக் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. தற்போது ஓ.டி.டி.யில் வெளியாகும் வெப் சீரிஸ்களில் ஆபாச காட்சிகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. ஓ.டி.டி.யில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கும் ஏன் தணிக்கை வேண்டும் என மக்கள் வலியுறுத்துகிறார்கள் என்று இப்போது எனக்குப் புரிகிறது. நடிகர்களும், நடிகைகளும் இதுபோன்ற பிரச்னைகளைப் புரிந்துகொண்டு நடிக்க வேண்டும். பார்வையாளர்கள் உங்களுக்கு நிறைய அன்பையும் மரியாதையையும் கொடுத்திருக்கிறார்கள், அதை நீங்கள் நிலைநிறுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
விஜயசாந்தி ஓடிடியில் வெளியான ‘ராணா நாயுடு’ வெப் சீரிஸைதான் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக குற்றம்சாட்டி உள்ளார் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் ஹிட்டடித்த ‘Ray Donovan’ தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட `ராணா நாயுடு’ வெப் சீரிஸ் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது. முன்னணி நடிகர் வெங்கடேஷும், பாகுபலி படத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ராணாவும் இந்த வெப் சீரிஸில் நடித்திருக்கின்றனர். இந்த வெப் சீரிஸில் அதிக அளவு ஆபாசக் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய சாந்தி தெரிவித்தது குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்