நாகர்கோவில்: ‘காதலித்த பெண்ணை திருமணம் செய்து சாதாரண வாழ்க்கைக்கு வர ஆசைப்பட்டேன். ஆனால் குடும்ப நெருக்கடியால் காதல் கைகூட வில்லை’ என பாதிரியார் போலீசாரிடம் கூறி உள்ளார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சூழால் குடயால்விளையை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (29). பாதிரியாரான இவர், ஆசி வழங்கி வழங்குவதாக கூறி பெண்களுடன் நெருக்கம் ஏற்படுத்தி வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக சாட்டிங் செய்தும், வீடியோ காலில் பேசும்போது ஆபாசமாக வீடியோ எடுத்தும் வைத்து உள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக நர்சிங் மாணவி அளித்த புகாரின்பேரில், போலீசார் நேற்று முன்தினம் பாதிரியரை கைது விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாதிரியார் பெனடிக் ஆன்றோ 12ம் வகுப்பு முடித்துவிட்டு, இறையியல் கல்வி, தத்துவவியல் படித்துள்ளார். தொலை தூர கல்வி மூலம் எம்.ஏ., எம்.பி.ஏ. படித்திருக்கிறார். இவருக்கு ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய 3 மொழிகள் நன்றாக தெரியும். சென்னையில் இருந்த கால கட்டத்தில் தான் அந்த பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்த பெண்ணை பாதிரியார் காதலிக்க தொடங்கினார். தன்னுடைய இறையியல் தத்துவத்துக்கு மாறாக நடந்து கொள்வதை விரும்பாமல், பாதிரியார் பொறுப்பில் இருந்து வெளியேறி, சாதாரண வாழ்க்கைக்கு வர ஆசைப்பட்டார். ஆனால் அவரது வீட்டில் உள்ளவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை.
தனது காதல் நிறைவேற வில்லை என்றாலும் கூட தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகி உள்ளார். காதலிக்கும் போதே இருவரும் அவ்வப்போது வீடியோ காலில் பேசுவது வழக்கம். அவ்வாறு பேசும் சமயங்களில் தான் வீடியோ பதிவு செய்துள்ளார். சென்னையில் உள்ள அந்த பெண் அவ்வப்போது குமரி மாவட்டத்துக்கும் வந்து, பாதிரியாரை சந்திப்பது வழக்கம். வீடியோ காலில் பேசும் போது நடந்து கொண்டதை தான், பாதிரியார் வீடியோ பதிவு செய்து லேப்டாப்பில் வைத்துள்ளார்.
இதுதவிர தனக்கு அறிமுகமான அனைத்து இளம்பெண்களுடன் செல்பி எடுத்து, அந்த புகைப்படங்களையும் லேப் டாப்பில் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் தான், கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் கிடைத்தது. அந்த பழக்கத்தில் அந்த பெண்ணுடனும் பழகி வந்துள்ளார். வாட்ஸ் அப் சாட்டிங் வழக்கமானது. பாதிரியார் சொந்தமாக கார் வாங்கியபோது, பார்ட்டி கேட்ட அந்த இளம்பெண்ணை தனியாக வரும்படி கூறி உள்ளார். ஒரு கட்டத்தில் பாதிரியாரின் பதிவுகள் பிடிக்காமல் தனது தங்கையிடம் அந்த இளம்பெண் கூறி உள்ளார்.
அவரது தங்கை, தனது நண்பரான சட்டக்கல்லூரி மாணவரிடம் இது குறித்து கூற அதன் பின்னரே பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்து வெளி உலகிற்கு தெரிய வந்தது. யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ எதுவும் செய்யவில்லை என பாதிரியார் உறுதியாக கூறி வருகிறார். இன்னும் சில பெண்களிடம் புகார் வாங்கி, வழக்கில் இணைத்து உள்ளோம். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணை முடிவில் தான் மேற்கொண்டு விபரங்களை கூற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
* இரு வாரங்களில் குற்றப்பத்திரிகை
பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பான நடவடிக்கைகளை சைபர் க்ரைம் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் இன்னும் இரு வாரங்களில் பாதிரியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என போலீசார் கூறி உள்ளனர்.
* செல்போன் எங்கே?
பாதிரியார் மீது ஏற்கனவே கொல்லங்கோடு போலீசார் தகராறு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இன்னும் ஒரு நபரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இதற்கிடையே பாதிரியாரின் மற்றொரு செல்போன் இன்னும் போலீசிடம் சிக்க வில்லை. அந்த செல்போன், தலைமறைவாக உள்ள நபரிடம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுபற்றி விவரங்களை பெறவும் பாதிரியாரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
* தாய், மகள், மருமகளிடம் சாட்டிங்
பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, குடும்ப பிரச்னைக்காக வரும் பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கி, முதலில் சாதாரணமாக பேசுவது போல் பழக தொடங்கி பின்னர் குட்மார்னிங், குட் நைட் என்ற ரீதியில் சாட்டிங்கை தொடங்குவார். படிப்படியாக தொடரும் பதிவுகளை வைத்து அவர்களை வலையில் வீழ்த்தி உள்ளார். இவருடன் வந்து பேசுவது, அருகில் நிற்பது, தனியாக சந்திப்பதை இளம்பெண்கள் பெரும் பாக்கியமாக கருதியுள்ளனர். இதை தனக்கு சாதகமாக்கி கான்ட்ராக்டர் ஒருவரின் குடும்பத்தில் தாய், மகள், மருமகள் ஆகிய 3 பேரிடமும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரிடம் சாட்டிங் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், கடவுளை நெருங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவேன் என்று கூறி இளம்பெண்களை பாதிரியார் தனியாக சந்தித்ததும் தெரியவந்து உள்ளது.