நியூயார்க்,
உலக அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி பா.ஜ.க. என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற அமெரிக்க பத்திரிகையில் வால்டர் ரஸ்செல் மீட் என்பவர் எழுதிய கட்டுரை தெரிவிக்கின்றது.
இதன்படி, இந்தியாவில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க., அமெரிக்காவின் தேசிய நலன்களின்படி பார்க்கும்போது, உலக அளவில் மிக முக்கியம் வாய்ந்த கட்சியாக உள்ளது. எனினும், அக்கட்சி குறைவாகவே புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தொடர் வெற்றி பெற்ற பா.ஜ.க. அடுத்து 2024-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றியை திரும்ப பெறும் முனைப்பில் உள்ளது என கட்டுரை தெரிவிக்கின்றது.
ஒரு முன்னணி பொருளாதார சக்தி படைத்த நாடாக இந்தியா வெளிப்பட்டு வருவதுடன், இந்தோ – பசிபிக் பிராந்திய பகுதியில் அமெரிக்காவின் செயல் திட்டத்திற்கு உறுதுணையாக ஜப்பானுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது.
வளர்ந்து வரும் சீனாவின் ஆற்றலை சமன்படுத்தும் வகையிலான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு, பா.ஜ.க.வின் உதவியின்றி செயல்படுவது பலன் தராது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என மீட் நம்புகிறார். ஏனெனில், இந்தியர்கள் அல்லாத பலரும், அரசியல் மற்றும் கலாசாரத்தில் வளர்ந்து வரும் அதன் வரலாறு பற்றி அறிந்திருக்கவில்லை.
முஸ்லிம் சகோதரர்களை போன்று, பா.ஜ.க.வானது நவீனத்துவத்தின் முக்கிய விசயங்களை தழுவியபோதிலும் கூட, மேற்கத்திய தாராளவாத விசயங்கள் மற்றும் முன்னுரிமைகளை புறந்தள்ளுகிறது.
சீன கம்யூனிஸ்டு கட்சியை போன்று, 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களை கொண்ட நாட்டை, வழிநடத்தி சென்று உலகளாவிய சூப்பர் ஆற்றல் கொண்ட நாடாவதற்கு பா.ஜ.க. நம்பிக்கை கொண்டு உள்ளது.
இஸ்ரேலின் லிகுட் கட்சியை போன்று, பாரம்பரிய மதிப்புகளுடன் கூடிய, வர்த்தக சந்தைக்கு ஆதரவான பொருளாதார நிலைப்பாட்டை அடிப்படையிலேயே பா.ஜ.க. இணைந்து செயல்படுத்தி வருகிறது.
ஆனால், அமெரிக்க நிபுணர்கள், அதிலும் இடதுசாரி தாராளவாத எண்ணம் கொண்டவர்கள் பிரதமர் மோடியின் இந்தியாவை, டென்மார்க்கை போல் ஏன் நீங்கள் இல்லை? என கேட்கிறார்கள்.
எனினும், இந்தியா ஒரு சிக்கல் நிறைந்த பகுதி. அதில் வேறு சில விசயங்களும் உள்ளன என கூறும் மீட், கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் இந்தியாவின் வடகிழக்கில் பா.ஜ.க.வின் சமீபத்திய, குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. அரசு, ஷியா பிரிவு முஸ்லிம்களின் வலிமையான ஆதரவை பெற்று திகழ்கிறது என கூறுகிறார்.
சாதி வேற்றுமைக்கு எதிராக போராடுவதற்கான முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பங்கு முக்கியம் வாய்ந்தது என கட்டுரை குறிப்பிட்டு உள்ளதுடன், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களுடனான எனது தீவிர, தொடர் சந்திப்புக்கு பின்னர், அவர்களது சில விமர்சனங்களுக்கு பின்பு, அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினர் பொதுவாக, ஒரு சிக்கலான மற்றும் சக்தி வாய்ந்த இயக்கம் பற்றி புரிந்து கொள்ள முன்வர வேண்டும் என என்னை நானே சமரசப்படுத்தி கொண்டேன் என மீட் தெரிவித்து உள்ளார்.