அதிமுக ஆட்சியில் தெர்மாகோல் விவகாரத்தால் அதிகம் விமர்சிக்கப்பட்ட செல்லூர் ராஜு அண்மையில் புலி வாலை பிடித்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள செல்லூர் ராஜு அங்கு புலிவாலை பிடித்தபடி எடுத்த புகைப்படம்தான் அது.
அந்த படத்தையும் பல பேர் மோசமாக விமர்சித்தும் மீம்ஸ் போட்டும் கிண்டலடித்து வந்தனர். இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா செல்லூர் ராஜூவின் ட்வீட்டுக்கு டபுள் மீனிங்கில் கிண்டலடித்து கமெண்ட் செய்திருந்தார். திருச்சி சூர்யா பதிவிட்டுள்ள ட்வீட்டில் ” நகைச்சுவைக்கு ஒரு வார்த்தை சொல்லுவார்கள் வண்டலூரில் ஒரு வேலை உள்ளது என அதை கரெக்டாக செய்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்” என இவ்வாறு கிண்டல் செய்தார்.
இதற்கு நெட்டிசன்கள், ”இது தான் கூட்டணி கட்சி தலைவர்களை, நீங்கள் மதிக்கும் லட்சனமா? அவரது வயது என்ன? அரசியல் அனுபவம் என்ன? என்று சொல்லி திருச்சி சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். அதேபோல, திமுகவினரும் அந்த ட்வீட்டுக்கு வரிசைகட்டி வந்து கிண்டலடித்து சென்றனர்.
திமுகவினர் மட்டுமல்லாமல் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் செல்லூர் ராஜூவை கிண்டல் செய்த்திருந்தனர். ஒரே சமூகத்தை சேர்ந்த நீங்கள் ஓபிஎஸ் உடன் இணையாமல் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்று துரோகம் செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். ஒரு சாதாரண புகைப்படத்துக்கு இவ்வளவு வன்மமா என்று நெட்டிசன்கள் செல்லூர் ராஜுவுக்கு ஆதரவாகவும் பேசினர்.
இந்நிலையில், இதை கவனித்த செல்லூர் ராஜு ஆவேசப்படாமல் ஒரு பதிவு போட்டுள்ளார். அது கவனம் பெற்றுள்ளது. செல்லூர் ராஜுவின் ட்வீட்டில், ” வணக்கம் trollers and haters. உங்கள் கருத்துக்கு நன்றி. இது உண்மையில் என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றாலும், நீங்கள் இப்போது புத்துணர்ச்சியாக உணர்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஈடுபாட்டை உங்களை சுற்றியுள்ள சமூக பிரச்சனைகளில் காட்டிணால் நாடும் வீடும் வளம்பெறும்” என இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.