ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா
தெலுங்குத் திரையுலகத்தின் அதிரடி ஆக்ஷன் ஹீரோ பாலகிருஷ்ணா. அவரது படங்களைப் பற்றி பலரும் கிண்டலடித்து விமர்சனம் செய்வார்கள். ஆனால், பாலகிருஷ்ணா நிஜத்தில் மருத்துவம் சார்ந்த பல்வேறு உதவிகளை இலவசமாக வழங்கி வருபவர் என்பது இங்குள்ள பலருக்குத் தெரியாது.
அவர் சேர்மன் ஆக இருக்கும் பசவதாரகம் மருத்துவமனையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். அடுத்து இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் அவரது அண்ணன் மகன் தாரகரத்னா இதய நோயால் பாதிக்கப்பட்டு 40 வயதிலேயே மரணமடைந்தார். “இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அனைத்து அறுவை சிகிச்சையும் இலவசம்,” என பாலகிருஷ்ணா அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள பசவதாரகம் மருத்துவமனை மற்றும் இந்துப்பூரில் பாலகிருஷ்ணா கட்டியுள்ள மருத்துவமனையில் இந்த இலவச சிகிச்சைகள் வழங்கப்படும்.
மேலும், இந்துப்பூரில் உள்ள மருத்துவமனை கட்டிடத்தில் ஒரு பிளாக்கிற்கு தாரகரத்னா பெயரையும் வைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஏழைகளுக்கு இலவச சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் வழங்க உள்ளதாகவும், நோயால் பாதிக்கப்பட்டு ஏழை குழந்தைகளுக்காக இலவச மருந்துகள் மற்றும் இலவச சாப்பாடுகள் வழங்கப்படும் என்றும் பாலகிருஷ்ணா தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.