“நான் இரண்டாம் வகுப்புப் படித்தபோது ஏற்பட்டது திருக்குறள் மீதான பிரியம். வயது கூடக் கூட அதன் மீதான வியப்பும் வளர்ந்து கொண்டேதான் வருகிறது. திருக்குறள் கொண்டு நான் சாதனைகள் செய்வது, அதன் புகழை என்னால் முடிந்த அளவுக்கு நானும் கொண்டு சேர்க்கவே’’ என்கிறார் செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றும் சீதளா தேவி.
திருக்குறளை வெற்றிலை, சாக்பீஸ் உள்ளிட்ட ஒன்பது பொருள்களில் எழுதி, ஒன்பது உலக சாதனைகள் புரிந்துள்ளார். அவரை சந்தித்தோம்.
“தமிழில் எம்.ஏ, பி.எட், எம்ஃபில் பட்டம் பெற்றேன். கல்லூரியில் படித்தபோது 2004-ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, விகடன் இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினேன்.
விகடன் எனக்குத் தந்த அறிமுகம் பெரிது. பின்னர், பி.ஏ வரலாறு மற்றும் பி.ஏ ஆங்கிலப் பட்டமும், மூன்று கௌரவ முனைவர் பட்டமும் பெற்றேன். தமிழ் இலக்கியப் பரப்பில் எத்தனையோ நூல்கள் இருந்தாலும், என்னைக் கவர்ந்தது திருக்குறள்தான்.
எனவே, திருக்குறள் பயிர் தமிழ் வயலில் செழிக்க, திருக்குறளை வைத்து உலக சாதனைகள் செய்ய முடிவு செய்தேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1330 குறட்பாக்களையும் வெற்றிலை, சோப்பு, சாக்பீஸ், புடவை, மர க்ளிப், பானை, ஃபைபர் தட்டு, இந்திய மேப், சோழி என ஒன்பது பொருள்களில் எழுதி ஒன்பது உலக சாதனைகள் புரிந்திருக்கிறேன்.
குறட்பாக்களை எழுதிய புடவையை, காரைக்குடியில் உள்ள தமிழ்த்தாய் சிலைக்குச் சூடக்கொடுக்க வைத்திருக்கிறேன்’’ என்கிறார் ஆர்வத்துடன். ’’1330 குறட்பாக்களில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு, உங்கள் வாழ்நாள் முழுக்கக் கடைப்பிடியுங்கள் என்று என் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறேன்.
அப்படி எனக்குப் பிடித்த, நான் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக வரித்துக்கொண்ட குறள்…
அகழ்வாரை தாங்கும் நிலம்போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை.
தன்னைத் தோண்டுகிறவர்களையும் பொறுத்துக் கொள்ளும் நிலம் போல, நம்மை இகழ்பவர்களையும் பொறுத்துக்கொள்வது தலை சிறந்த பண்பு என்கிறார் வள்ளுவர். எனவே, பண்பாளராக இருப்போம்’’ என்ற தமிழாசிரியை சீதளா தேவி, இதுவரை தன் தமிழ்ப் பணிகளுக்காகவும், சமுதாயப் பணிகளுக்காகவும் 500-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார் .
“திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதே என் கோரிக்கை, அதை நோக்கியே என் செயல்பாடுகள் இருக்கும்’’ என்கிறார் இந்தக் `குறளரசி’!