நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியானது. எதிர்பார்ப்புகளையும் மீறி இந்தத் திரைப்படம் 50 நாட்களையும் கடந்து வெற்றிக்கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களை நெருங்க உள்ள நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், இந்தப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
திரையரங்கைப் போன்றே, ஓடிடியிலும் ‘பதான்’ திரைப்படம் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை இந்தப் படம் 1,050 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும், இந்திய அளவில் இந்தப் படம் பல சாதனைகளையும் படைத்துள்ளது. அதன்படி, 2016-ம் ஆண்டு வெளியான அமீர்கானின் ‘தங்கல்’ திரைப்படம் 2,112 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் 1,811 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும், ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் 1,217 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திலும், யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் 1,198 கோடி ரூபாயுடன் 4-வது இடத்திலும் உள்ளன. அதற்கு அடுத்ததாக ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் 5-வது இடத்தில் உள்ளது.