கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு கடலூர் மாவட்ட மக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், என்எல்சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாகவும் என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலை வழங்குவதாகவும் கூறி என்எல்சி நிர்வாகம் தங்களை பலமுறை ஏமாற்றியதால் நிலங்களை தரமாட்டோம் என்று விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் கடந்த மார்ச் 10ஆம் தேதி வளையமாதேவி பகுதியை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு என்எல்சி விவகாரம் தொடர்பாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் “கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நில எடுப்பு என்ற பெயரில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் துணையோடு தொடர்ந்து என்எல்சிக்கு நிலம் மற்றும் வீடுகளை கொடுத்து தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடி வருகின்ற மக்களை அச்சுறுத்தும் வகையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றாத நிலையில் சேத்தியாதோப்பு கிழக்கு பகுதி சுரங்கம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை சுமார் 20 கிராமங்களில் உள்ள 21,000 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகின்ற காவிரி டெல்டா பகுதியை சேர்ந்த நிலங்களை கையகப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து விவசாயத்தை நாசமாக்கி நிலத்தடி நீரை பாழாக்கி சுகாதார சீர்கேடுகளை உருவாக்கி மக்கள் வசிப்பதற்கு தகுதியில்லா பகுதியாக மாற்றி வருவதால் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை குறித்து விவாதிக்க வேண்டும்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி முனுசாமி, கே.பி அன்பழகன், ஓ.எஸ் மணியன், ஆர்.பி உதயகுமார், தங்கமணி, கே.எஸ் செங்கோட்டையன் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.