கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காட்பாடி-விழுப்புரம் மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் கண்ணமங்கலம் வழியாக செல்லும்போது ரயில்வே கேட் மூடப்படும். அப்போது அவ்வழியாக வேலூர், திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள் வெகுநேரம் காத்திருந்து ரயில் சென்ற பிறகு கடந்து செல்வது வழக்கம். பல நேரங்களில் ரயில்கள் தாமதமாக கடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.
இதனால் கண்ணமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், வேலூர்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களாக கடந்த சில ஆண்டுகளாக நடந்துவருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சிறு பாலங்கள், மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.
அதன்படி ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அதன் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், வணிக வளாகங்கள், மாடி வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இப்பணிகள் முழுவீச்சில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.