கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் இடம் பல ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
இக்கோயிலுக்கு சொந்தமான இடம் சேஷம்பாடி ஊராட்சி மூப்பக்கோயிலில் உள்ளது. அந்த இடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த 2 சமூகத்தினருக்கிடையே, ஆக்கிரமிப்பு செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.
இதனைத் தொடந்து. அந்த இடத்தை கோயில் நிர்வாகம் கையகப்படுத்த முடிவு செய்தது. அதன்படி நேற்று கோயில் செயல் அலுவலர்கள் ச.சிவசங்கரி, சி.கணேஷ்குமார், பா.பிரபாகரன், அறநிலையத் துறை ஆய்வாளர் ஜெ.வெங்கடசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் எஸ்.மவுனீஸ்வரன், நில அளவையர் ரேனுகா ஆகியோர் இக்கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான சுமார் 2 ஏக்கர் இடத்தை மீட்டு, சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்து, தகவல் பலகை அமைத்தனர்.
இதனால், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் தாலுக்கா காவல் ஆய்வாளர் ப.கவிதா தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.