தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி கட்சிக் கொடியை தலைகீழாக ஏற்றியதால் சலசலப்பு ஏற்பட்டது. கொடியேற்றிய உடனேயே அதை கண்டுபிடித்துவிட்டதால், விரைந்து அதை இறக்கியுள்ளனர் தொண்டர்கள்.
மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று முன்தினம் மதுரை சென்றார். அங்கு கட்சி கூட்டங்கள், மாற்றுக் கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
இதையடுத்து பல இடங்களில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அவர். அந்தவகையில் இன்று மதுரை வாடிப்பட்டிக்கு கே.எஸ்.அழகிரி செல்ல இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அவரது வருகைக்காக தொண்டர்கள் நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில், அங்கு வந்த கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் சால்வை மற்றும் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் காங்கிரஸ் கட்சிக் கொடியை ஏற்றினார் கே.எஸ்.அழகிரி. அப்போது கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது. சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்ட தொண்டர்கள் ‘கொடி தலைகீழாக பறக்கிறது, இறக்குங்கள்’ என கூச்சலிட்டனர். இதையடுத்து கே.எஸ்.அழகிரி, “கொடியை கீழே இறக்கிய பின்னர் நீங்களே மாற்றிவிடுங்கள்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து விரைந்து சென்றுவிட்டார். அவர் மீண்டும் கொடியை ஏற்றாமல் அங்கிருந்து விரைந்து சென்றது, தொண்டர்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM