கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு வாரமாக குடிநீர் இல்லாததை கண்டித்து செவ்வாய்க்கிழமை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டுக்குரிய தண்ணீர் இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து மாணவ மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று காலை 11 மணியளவில் திடீரென வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் முறையாக குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டுக்குரிய தண்ணீர் வழங்க வேண்டும். கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில் வசூலிக்கப்படும் ரூ.1800 தொகையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மாணவ மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் கி.நிர்மலா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கல்லூரியில் குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டு ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் மோட்டார்கள் பழுதடைந்துள்ளன. அதுவரை குடிநீருக்கு மட்டும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மோட்டார் பழுது நீக்கப்பட்டு முறையாக தண்ணீர் வழங்கப்படும். வரும் கல்வியாண்டு முதல் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வசூலிக்கப்படும் தொகையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் உடனடியாக பொதுப்பணித்துறைக்கு தகவல் அளித்து டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, கல்லூரியில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் நிரப்ப நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து பொதுப்பணித்துறை பொறியாளரை தொடர்பு கொண்டு மோட்டார் பழுது நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து மாணவ மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பினர்.