விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்று கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திருக்கிறார்.
பல குரல் பேசி பலரையும் வியக்க வைத்தவர். மிமிக்ரி உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர். அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவருடன் கலக்கப்போவது யாரு மேடையில் பழகி நண்பனாக பயணித்த வெங்கடேஷை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினேன்.
“கோவை குணாவுக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்துச்சு. கடந்த மூன்று வருஷமா டயாலிசிஸ் பண்ணிட்டு இருந்தார். நண்பர்கள் எல்லாரும் எங்களால முடிஞ்ச சின்ன, சின்ன உதவிகளை அவருக்கு பண்ணிட்டு இருந்தோம். கிட்டத்தட்ட 5,6 வருஷம் முன்னாடியே அவர் இறந்திடுவார்னு எல்லாரும் நினைச்சோம். அந்த அளவுக்கு மோசமா அவருடைய உடல்நிலை இதுக்கு முன்னாடி இருந்துச்சு.
ஆனாலும், இத்தனை நாட்களாக அவரை ஆக்டிவ் ஆக வச்சிருந்தது அவருடைய நகைச்சுவை உணர்வு தான்! கோவிட் முன்னாடி வரைக்கும் ரொம்ப பரபரப்பா நிகழ்ச்சிகள் பண்ணிட்டு தான் இருந்தார். கடந்த 7,8 மாசமாகத்தான் எந்த நிகழ்ச்சிகளும் பண்ணல. அவருடைய ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டார். அவருடைய இழப்பு எங்க எல்லாருக்குமே மிகப்பெரிய இழப்பாகத்தான் கருதுறேன்!” என்றார்.
ஆழ்ந்த இரங்கல்கள்!