புதுடெல்லி: ஆயிரம் ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டிருக்கும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பது மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் தேவையை சமாளிப்பது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் டெலி அளித்த பதில் வருமாறு: 14.2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விற்பனையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் மேற்கொள்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த எரிவாயுத் தேவையில் 60 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறோம். சராசரி சவுதி ஒப்பந்த விலையின் அடிப்படையில்தான் இந்தியாவில் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 2019 – 2022 காலகட்டத்தில் ஒரு மெட்ரிக் டன் எரிவாயு விலை 454 அமெரிக்க டாலரிலிரிந்து 693 டாலராக உயர்ந்தது. பிப்ரவரி, 2023ல் இந்த விலை 790 டாலராக மேலும் உயர்ந்தது.
ஆனாலும் முடிந்தவரை இந்தியச் சந்தையில் இதன் விலையை ஒருவித ஸ்திரத்தன்மையோடு நிர்ணயிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்தன. இதை ஈடுசெய்வதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒருமுறை நிவாரணமாக 22 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு கொடுத்துள்ளது.
இதுதவிர, பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா 200 ரூபாய் மானியத்தை அரசு வழங்குகிறது. மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி டெல்லியில் இந்த சிலிண்டரின் விற்பனை விலை 1103 ரூபாயாக இருக்கிறது.
தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப சர்வதேச மார்க்கெட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அத்துடன் சர்வதேச அளவிலான சமூக,அரசியல் நிலவரங்களும் இதன் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில், பெட்ரோலியப் பொருத்களின் விலை இப்படிதான் இருக்கும் என்று முன்கூட்டியே கணிப்பது இயலாத காரியம். குறிப்பாக உலக அளவில் தற்போது நிலவும் நிச்சயமற்றதன்மை இந்த முன் யூகத்திற்கான வாய்ப்பை குறைத்துவிடுகிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரை 2022. ஏப்ரல் 22ம் தேதியிலிருந்து அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய சந்தையில் போதுமான அளவுக்கு பெட்ரோல், டீசல் இருப்பை உறுதிசெய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
பெட்ரோலியப் பொருட்களின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வது, இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை முழு அளவில் பயன்படுத்துவது, கூடுதல் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது, பெட்ரோலில் குறிப்பிட்ட அளவுக்கு எத்தனால் கலந்து பயன்படுத்துவது என பல விஷயங்கள் அதில் அடங்கும்.
பெட்ரோலுக்கு நவம்பர் 2021, மே 2022 என இரண்டு கலால் வரியின் பயன் உபயோகிப்பாளர்களுக்கு முழு அளவில் கிடைத்தது. இதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், ஏழை நடுத்தர மக்கள் பயனடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்ததன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்கள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வாட் வரியைக் குறைத்து, நடுத்தர மக்களின் சுமையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்தன.
இவ்வாறு அமைச்சர் ராமேஷ்வர் டெலி பதிலளித்தார்.