சென்னை : மெத்தெப்டமைன் போதை பொருள் விற்பனை செய்த நைஜீரியரை, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்துவதற்கு எதிரான நடவடிக்கையின் தொடர்ச்சியாக, இன்று ஒரு நைஜீரிய நாட்டை சேர்ந்தவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து மெத்தெப்டமைன் போதை பொருளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே, வால்டாக்ஸ் சாலையில் மெத்தெப்டமைன் என்ற போதைப்பொருளை விற்பனை செய்த நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 59 கிராம் மெத்தெப்டமைன் போதை பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு ரூ. 3.25 லட்சம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த நைஜீரியர் 2014ல், சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்து, 2015ல் காலாவதியானதால், ஈரோடு மாவட்டம், பெருந்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அக்டோபர் 2022 இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அந்த நபர், போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மெத்தெப்டமைன் என்ற போதை பொருளை, சென்னையின் முக்கிய பகுதியில் வைத்து வெளிநாட்டவர் விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.