இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அமல்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயண நேரத்தை பெரிதும் குறைப்பதால் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதேசமயம் கட்டணம் அதிகம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
வந்தே பாரத் ரயில் சேவை
தற்போது வரை 10 வந்தே பாரத் ரயில்கள் மூலம் பல்வேறு நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை – கோவை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை – மைசூரு இடையில் அதிவேக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை டூ கோவை
இது புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும். காட்பாடி, கே.எஸ்.ஆர் பெங்களூரு என இரண்டே நிறுத்தங்களில் மட்டும் தான் நின்று செல்லும். இதையடுத்து தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையானது சென்னை – கோவை ஆகிய நகரங்களுக்கு இடையில் வரவுள்ளது. இதனை பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.
ரயில் நிறுத்தங்கள்
வழக்கமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகபட்சம் 4 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். அந்த வகையில் காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த நாட்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்? எத்தனை மணி நேரத்தில் சென்றடையும்?
புறப்படும் நேரம்
மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்? போன்ற விவரங்கள் இனிமேல் தான் வெளியாகும் எனத் தெரிகிறது. சென்னையில் இருந்து இன்டர்சிட்டி மற்றும் சதாப்தி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு முன்னதாகவே வந்தே பாரத் ரயில் காலையில் புறப்படும் என்றும், பிற்பகலில் கோவையை சென்றடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இரண்டு திட்டங்கள்
மேலும் ஏப்ரல் 8ஆம் தேதி அன்று திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி இடையில் 37 கிலோமீட்டர் தூர அகல ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதில் 294 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமின்றி தாம்பரம் – செங்கோட்டை இடையில் வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் ரயில் சேவையும் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதற்கிடையில் மார்ச் 27ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கிறார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.