சேலத்தில் கையில் துப்பாக்கியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் ஏற்காடு பகுதியில் அசம்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர், தனக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இதையடுத்து நிலத்தின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி உரிமம் பெற்று கடந்த 25 ஆண்டுகளாக துப்பாக்கி வைத்திருந்ததோடு, ஏற்காடு காவல் நிலையத்தில் துப்பாக்கி உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பித்தும் இருந்துள்ளார் பழனிவேல்.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு பழனிவேல் உயிரிழந்த நிலையில், தங்களுக்கு துப்பாக்கி பயன்படாது எனக் கூறி பழனிவேலின் மனைவி பார்வதி, மகள் சுமதி ஆகியோர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று சென்றுள்ளனர். திடீரென அவர்கள் துப்பாக்கியுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கியுடன் வருகிறார்கள் என்ற தகவலை கேட்டவுடனேயே அவர்களை பாதியில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ‘துப்பாக்கியுடன் வந்துள்ளது ஏன்’ என அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர்கள் துப்பாக்கியை ஒப்படைக்க வந்துள்ளதாக முழு விவரத்தையும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து துப்பாக்கி ஒப்படைக்க ஆர்டிஓ அலுவலகத்திற்குச் செல்லுமாறு கூறிய போலீசார், அவர்களின் விவரங்களை பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM