சோக்சிக்கு எதிரான ரெட் நோட்டீஸ் ரத்து திரும்ப பெறும்படி சி.பி.ஐ., வலியுறுத்தல்| CBI urges withdrawal of red notice against Choksi

புதுடில்லி வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மெஹுல் சோக்சியின் பெயர், ‘இன்டர்போலின் ரெட் நோட்டீஸ்’ பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சோக்சியின் பெயரை திரும்பவும் அந்த பட்டியலில் சேர்க்கும்படி சி.பி.ஐ., வலியுறுத்தி உள்ளது.

பிரபல வைர வியாபாரியான மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.

இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. சோக்சியை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று சோக்சியின் பெயரை, சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போல், ரெட் நோட்டீஸ் பட்டியலில் சேர்த்தது.

இதன் வாயிலாக, சோக்சி வேறு எந்த நாட்டுக்கும் செல்ல முடியாது. அவ்வாறு சென்றால், விமான நிலையத்திலேயே அவரை கைது செய்ய முடியும்.

இந்நிலையில், ரெட் நோட்டீசில் இருந்து தன் பெயரை நீக்கும்படி, சி.சி.எப்., எனப்படும், இன்டர்போல் கட்டுப்பாட்டு ஆணையத்தில் சோக்சி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சி.சி.எப்., என்பது, இன்டர்போல் செயலகத்தில் செயல்படும் தனிப் பிரிவு. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

சோக்சியின் மனுவை விசாரித்த சி.சி.எப்.,பின் ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய குழு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை என கூறி, ரெட் நோட்டீசிலிருந்து அவரது பெயரை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும், இந்தியாவில் சோக்சிக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை, இந்த நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ‘சோக்சி விஷயத்தில் சி.சி.எப்., தவறான முடிவு எடுத்துள்ளது. அந்த முடிவை திரும்ப பெற வேண்டும். சோக்சியின் பெயரை ரெட் நோட்டீசில் சேர்ப்பது குறித்து, சி.சி.எப்.,பில் மேல் முறையீடு செய்யப்படும்’ என, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.,யும் ஏவி விடப்படுகின்றன. ஆனால், தலைமறைவாக உள்ள சோக்சிக்கு சலுகை காட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சிறந்த நண்பருக்காக பார்லிமென்ட் முடக்கப்படும் போது, பழைய நண்பருக்கு எப்படி உதவாமல் இருக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.