வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
சிறுவர்கள் விளையாடும் மாலை நேரங்களில், பூங்காவில் நேரம் செலவிடுவதென்பது அனைவருக்குமான மன ஆரோக்கியத்திற்கான வழி.
நான் கண்ட ரசித்து நிகழ்வுகள் சில .. பகிர்கிறேன்.
1. மூன்று அல்லது நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவர் சறுக்குப்பலகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு குழந்தையோடு அவனுடைய அப்பா வந்திருந்தார். இன்னொரு குழந்தையோடு அவனுடைய தாத்தா வந்திருந்தார்.
இரண்டு குழந்தைகளும் விளையாடிய படி இருக்க, ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை சறுக்குப்பலகையில் சறுக்கும்போது பின்னிருந்து காலால் உதைத்து விட்டது. முதலில் தடுமாறிய முன்னிருந்த குழந்தை பிறகு சமாளித்து கீழே இறங்கிவிட்டது.
இக்காட்சியைப் பார்த்த அக்குழந்தையின் அப்பா, தள்ளிவிட்ட இன்னொரு குழந்தையைப் பார்த்து திட்ட ஆரம்பித்தார். அதற்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் விளையாட ஆரம்பித்தது. இவர் திட்டுவதை நிறுத்துவதாக இல்லை.
அருகிலிருந்த அக்குழந்தையின் தாத்தாவோ, விடுங்க சார் குழந்தைங்கன்னா அப்படிதான் என்று சமாதானம் செய்ய முயற்சித்தார்.ஆனால் அந்த அப்பாவோ.. அதெப்படி அடி பட்ருந்தா என்னாகும்?? உங்க பேரனை சாரி கேக்க சொல்லுங்க என்றார். தாத்தா தன் பேரனை சாரி சொல்லுடா என்றதும், அந்தக் குழந்தையும் விளையாடிக் கொண்டே சாரி என்றது..
ஆசாமி விடுவதாயில்லை..பிகில் சினிமா கோச் விஜய் அளவிற்கு, கேக்கல சத்தமா சொல்லு என்று அந்தக் குழந்தையை டார்கெட் செய்தது மட்டுமல்லாமல், தன் மகனைப் பார்த்து , இனிமே இவனோடு விளையாடாதா.. என சத்தம் போட்டார்.
தாத்தாவோ மீண்டும், பசங்க விளையாடட்டும் விடுங்க என கூறிக்கொண்டே இருந்தார்.. அவரிடமும் சண்டைப் போட்டபடியே இருந்தார் அந்த அப்பா. ஒரு கட்டத்தில் சண்டை பெரிதாக செல்ல செல்ல.. அங்கிருந்த கூட்டம் வேடிக்கைப் பார்த்தது. ஆனால் அந்த இரண்டு குழந்தைகளும் கைக்கோர்த்தபடி, வா நாம வேற இடத்துக்கு போய் விளையாடலாம் என்றபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். சண்டைப் போட்ட மனிதருக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்று புரியாமல் சண்டையை நிறுத்திக் கொண்டார்.
2. சிறுவர்கள் கூட்டம் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.. கூச்சலுக்கு பஞ்சமில்லை. ஆர்பாட்டத்துடன் கலந்த விளையாட்டு. நன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது விளையாட்டு ஜோரில் ஒருவன் விழுந்து விட்டான்.வலி தாங்கவில்லை அவனுக்கு . ஒரே அழுகை.
சிறுவர்கள் அனைவரும் என்ன சொல்லியும் அவன் அழுகையை நிறுத்தவில்லை. திடீரென ஒரு சிறுவன் தன் பாக்கெட்டில் இருந்த சாக்லேட்டை அழும் சிறுவனிடம் நீட்டினான். அதைப் பார்த்தவுடன் அழுகை நின்று, மீண்டும் விளையாட்டு ஆரம்பமானது. அத்தனையும் முடிந்தவுடன் அனைவரும் புறப்படும் நேரத்தில் எல்லா குழந்தைகளும் டாட்டா பை பை சொல்ல, ஒரு சிறுவன் மட்டும், சாக்லேட் குடுத்த சிறுவனைப் பார்த்து,. நான் உனக்கு டாட்டா சொல்ல மாட்டேன், என் டாய்ஸ் எதுவும் இனிமே உனக்கு இல்ல.. நீ எனக்கு சாக்லேட் தர்லல்ல போ என்றான் சோகமாக..
ஒரு நொடி கூட யோசிக்காமல், அதைக்கேட்ட அந்த சாக்லேட் குடுத்த சிறுவன், அவனை அருகில் அழைத்து … என் பர்த்டேக்கு உனக்கு மட்டும் த்ரீ சாக்லேட்ஸ் தர்றேன். அவனுக்குக் கிடையாது ஓகே வா என்று கூறி சோகத்தில் இருந்த சிறுவனை சிரிக்க வைத்தான். அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஆறு வயது தான் இருக்கும். இருவரும் டாட்டா பை பை சொல்லி விட்டுப் பிரிந்தனர்.
அந்தந்தத் தருணங்களில் வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள் குழந்தைகள் மட்டுமே..முந்தைய நொடியின் வருத்தங்களும், அடுத்த நொடியின் எதிர்பார்ப்புகளும் எதுவும் அறியாதவர்கள்..
-Mrs. J. Vinu
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.