டெல்லி: டெல்லி, உ.பி, பஞ்சாப், ஹரியானா மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடஇந்தியாவில் மட்டுமல்ல தஜிகிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய நிலஅதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் நகர் பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக பாகிஸ்தானின் ARY நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவின் வடமாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியில் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம்புகுந்து வருகின்றனர்.
எனினும் சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.