டெல்லி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் மத்திய அரசு ஒப்புதல் வழங்காததால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்தக் கடிதத்தில் அவர், “கடந்த 75 ஆண்டுகளில் ஒரு மாநிலத்தின் பட்ஜெட் முடக்கப்படுவது இதுவே முதல் முறை. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். டெல்லி மக்கள் கைகூப்பி கேட்கிறார்கள்; பட்ஜெட்டை நிறுத்தி விடாதீர்கள்” என அவர் குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது.
அதே வேளையில் மத்திய அரசு தரப்பிலிருந்து, “பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு உள் கட்டமைப்புக்கான செலவுகளை விட விளம்பரங்களுக்கான செலவு ஏன் அதிகம் செய்யப்பட்டது?” என்பது குறித்து டெல்லி அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தக் கேள்விக்கு டெல்லி அரசு விளக்கம் அளிக்காத வரை பட்ஜெட்டுக்கான ஒப்புதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன் நிலுவையில் இருக்கும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் முற்றியிருந்த நிலையில், இந்த பட்ஜெட் நிராகரிப்பு விவகாரம் மத்திய அரசுக்கும் கெஜ்ரிவால் அரசுக்கும் இடையேயான மோதலை அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஒப்புதல் வழங்காததால் சட்டசபையில் எப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படாமல் இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் டெல்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM